ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம் : கோவையில் 250 மாருதி கார் உரிமையாளர்களிடம் கிடுக்கிபிடி விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம் : கோவையில் 250 மாருதி கார் உரிமையாளர்களிடம் கிடுக்கிபிடி விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள 250 மாருதி சுசூகி வெர்ஷா கார் உரிமையாளர்களிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த கொலை வழக்கில் திருச்சி போலீஸார் விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இக்கொலை வழக்கில் பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களைப் பிடிக்க, கோவை காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களிலும், காவல்நிலையங்களின் அறிவிப்புப் பலகையிலும் போலீஸார் சுவரொட்டிகளை ஒட்டி விசாரித்து வந்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் மாருதி சுசூகி வெர்ஷா கார் முக்கியமாக தடயமாக கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1,400 வெர்ஷா கார்கள் இருக்கும் நிலையில், கோவையில் மட்டும் 250 வெர்ஷா கார்கள் உள்ளன. சிபிசிஐடி டிஐஜி ஷகில் அக்தர் தலைமையில் சிறப்பு குழுவினர் இன்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இதனால் இவ்வழக்கின் விசாரணை அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in