இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்துக் கொன்றதாக தாய், தந்தை, கணவன் கைது

 செல்வம்,ரெஜினா, செல்வக்குமார்.
செல்வம்,ரெஜினா, செல்வக்குமார்.

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த ஆத்திரத்தில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அவரது தாய், தந்தை, கணவன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை நகரின் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா(24). இவரது கணவர் செல்வம். இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆக.11-ம் தேதி சுமித்ரா திருவெற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். இதன் பின் இரவு அவரது தாய் ரெஜினா எழுப்ப முயன்றார். அப்போது சுமித்ரா சுயநினைவின்றி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுமித்ராவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே சுமித்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மீன்பிடி துறைமுகம் போலீஸார், சுமித்ரா உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதன் பின் பிரேத பரிசோதனை முடிந்து சுமித்ரா உடலை அவரது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். பின்னர் உயிரிழந்த சுமித்ரா உடல் பாகங்களை தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கையில், சுமித்ரா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சுமித்ரா வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீஸார் விசாரணை நடத்தி்னர். அப்போது சுமித்ரா வீட்டிற்கு சந்தேகப்படும்படி யாரும் வராததால் போலீஸார் குழப்பமடைந்தனர்.

இதனால் சுமித்ராவின் தாய் ரெஜினா, தந்தை செல்வக்குமார், கணவர் செல்வம் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சுமித்ராவுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளான நிலையில் குடும்பத்துடன் திருவெற்றியூரில் வசித்து வந்துள்ளனர். அங்கு சுமித்ராவுக்கு வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுமித்ரா செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசிக்கொண்டேயிருந்ததால் அதை அவரது தாய் கண்டித்துள்ளார். இதன் பின் திருவெற்றியூர் வீட்டைக் காலி செய்து விட்டு குடும்பத்துடன் புது வண்ணாரப்பேட்டையில் குடியேறினர். அங்கு வந்த பிறகும் சுமித்ரா பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டதுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சுமித்ரா வெளியே சுற்றி விட்டு வீட்டிற்கு வந்தவுடன் தாய் ரெஜினா, "எங்கே சென்று விட்டு வருகிறாய்?" என கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சுமித்ரா தூங்கச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரெஜினா, சுமித்ரா தூங்கி கொண்டிருந்த போது அவரது கழுத்தை நெரிக்க அவரது கணவர் செல்வக்குமார் இரு கைகளையும், சுமித்ராவின் கணவர் செல்வம் அவரது கால்களையும் பிடித்து கொண்டனர். இதனால் சுமித்ரா உயிரிழந்துள்ளனர். இந்த கொலை மறைக்க திட்டமிட்ட மூவரும், இதன் பின் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை வரவழைத்து சுமித்ரா தூங்கிய நிலையில் உயிரிழந்ததாக நாடகமாடி நம்ப வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சுமித்ராவை கொலை செய்து விட்டு இயற்கை மரணம் என நாடகமாடிய ரெஜினா, செல்வக்குமார், செல்வம் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in