மேற்கு வங்க காதல் ஜோடி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: இரண்டு இளைஞர்கள் கைது

மேற்கு வங்க காதல் ஜோடி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: இரண்டு இளைஞர்கள் கைது

சென்னை தனியார் விடுதியில் மேற்கு வங்க காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட போது சிக்கிய கடிதத்தின் மூலம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாமிற்குத் தப்பிச் சென்ற மற்றொருவரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. விடுதி நிர்வாகி அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீஸார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், உயிரிழந்தவர்கள் மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த பிரசன்ஜித் கோஷ்( 23) மற்றும் அர்பிதா பால்(20) என்பது தெரிய வந்தது. காதலர்களான இவர்கள் 3-ம் தேதி கணவன், மனைவி எனக்கூறி திருவல்லிக்கேணி விடுதியில் அறை எடுத்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்த வங்க மொழியில் எழுதப்பட்ட கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அக்கடிதத்தில் 'எங்களது தற்கொலைக்கு நிதீஷ்குமார், தர்மேந்திரா, ராஜா ஆகியோர் தான் காரணம். இதனால் இருவரும் உலகை விட்டுச்செல்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த நிதீஷ்குமார், திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா ஆகியோரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த அர்பிதா பால், 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கி வரவேற்பாளராகப் பணியாற்றியுள்ளார். அதே ஓட்டலில் வேலை பார்த்த தர்மேந்திராவுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியுள்ளது.

இதன் பின் தியாகராய நகரில் உள்ள ஓட்டலில் அர்பிதா பால் பணியில் சேர்ந்துள்ளார். அங்கு நிதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அர்பிதா பால் தர்மேந்திராவை காதலித்து வருவதை நிதீஷின் நண்பர் ராஜா அறிந்தார். இதுகுறித்து அவர் நிதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதனால் அர்பிதாவிடம் நிதீஷ்குமார், ராஜா ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இந்த நிலையில் அர்பிதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைக் காட்டி நிதீஷ் குமார், தர்மேந்திரா, ராஜா ஆகியோர் பாலியல் உறவுக்கு இணங்குமாறு அர்பிதாவை மிரட்டியுள்ளனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த அர்பிதா, மேற்கு வங்கத்தைச்சேர்ந்த தனது காதலரான பிரசன்ஜித் என்பவரை, 3-ம் தேதி சென்னைக்கு வரவழைத்துள்ளார். அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர் .

பின்னர் அர்பிதா கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதலி இறந்த சோகத்தில் பிரசன்ஜித் இரண்டு நாட்களாக பிணத்துடன் இருந்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவ்வழக்கில் அசாமிற்குத் தப்பிச்சென்ற தர்மேந்திராவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in