ஒரே நாளில் 99 சுங்கத்துறை ஆணையர்கள் திடீர் இடமாற்றம்: மத்திய அரசின் அதிரடிக்குக் காரணம் என்ன?

ஒரே நாளில் 99 சுங்கத்துறை ஆணையர்கள் திடீர் இடமாற்றம்: மத்திய அரசின் அதிரடிக்குக் காரணம் என்ன?

சென்னை விமான நிலையம் மற்றும் காா்கோ பிரிவு சுங்கத்துறை முதன்மை ஆணையா் உதய் பாஸ்கா் சுங்கத்துறை அதிகாரிகள் பயிற்சி நிலையத்தின் பொது மேலாளராகவும், கொச்சி ஜிஎஸ்டி வரி பிரிவு ஆணையா், சென்னை விமானநிலையம்,காா்கோ பிரிவு சுங்கத்துறை முதன்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக கே ஆர் உதய்பாஸ்கர் கடந்த 10 மாதங்களாக பணியாற்றி வந்தார். சென்னை சா்வதேச விமானநிலைய சுங்கத்துறை ஆணையராக இருந்ததோடு, விமானநிலைய காா்கோ பிரிவிற்கும் முதன்மை ஆணையராக பொறுப்பு வகித்தாா். இவர் சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்குப் பொறுப்பேற்று ஓராண்டு முடிவதற்குள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தற்போது அவர் சென்னை உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் பயிற்சி நிலையத்தின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். கேரள மாநிலம் கொச்சியில் ஜிஎஸ்டி ஆணையராக இருக்கும் மேத்யூ ஜோல்லி சென்னை விமானநிலையம் காா்கோ சுங்கத்துறை முதன்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சென்னை சுங்கத்தீா்ப்பாயம் ஆணையராக இருந்த ஶ்ரீதா் ரெட்டி சென்னை துறைமுகம் 3- வது பிரிவு சுங்கத்துறை ஆணையராகவும், மும்பை சுங்கத்துறை ஆணையராக இருந்த சுரேஷ்பாபு சென்னை ஜிஎஸ்டி ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா். சென்னை துறைமுகம் சுங்கத்துறை ஆணையா் அகமது உஸ்மானி மும்பை சுங்கத்துறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். டெல்லி நிதித்துறை தலைமையகத்திலிருந்த தமிழ்வளவன் சென்னை ஜிஎஸ்டி ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

கொச்சி சுங்கத்துறை தலைமையகத்திலிருந்த முகமது யூசுப் சென்னை ஜிஎஸ்டிக்கும், ஹவுகாத்தி சுங்கத்துறை அப்பீல் ஆணையா் சக்திவேல் சென்னை சுங்கத்துறை அப்பீல் ஆணையராகவும், சென்னை சுங்கத்துறை அப்பீல் ஆணையா் யமுனா தேவி திருப்பதி ஜிஎஸ்டிக்கும், சென்னை சுங்க அதிகாரிகள் பயிற்சி நிலைய ஆணையா் குண்டுராவ் பிரசாத் சென்னை துறைமுகம் சுங்கத்துறை ஆணையராகவும், சென்னை தெற்கு ஜிஎஸ்டி ஆணையா் சுதா சோகா,சேலம் ஜிஎஸ்டி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

சென்னை விமானநிலையம் காா்கோ பிரிவு, சென்னை துறைமுகம், ஜிஎஸ்டி வரி பிரிவு, மத்திய வரி தீா்பாயம் ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் 11 உயா் அதிகாரிகள் அதிரடியாக திடீா் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த திடீர் இடம் மாற்றம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. ஏனெனில், சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதை பொருள், வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த 5 பேரிடம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரும் ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை விமானநிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நாடு முழுவதும் சுங்கத்துறை, மத்திய வருவாய் துறை, ஜிஎஸ்டி உள்ளிட்ட துறைகளில் உயர் பதவி வகித்த 99 உயர் அதிகாரிகளை ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் மத்திய நிதித்துறை அமைச்சகம், இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in