கனமழை; இடிந்து விழுந்த ஏர்போர்ட் மேற்கூரை... அலறியடித்தப்படி உயிர் தப்பிய பயணிகள்!

பெயர்ந்து விழும் கவுகாத்தி விமான நிலைய மேற்கூரை
பெயர்ந்து விழும் கவுகாத்தி விமான நிலைய மேற்கூரை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று மழை பெய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள விமான நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று இப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

அந்த இடத்தின் அருகே ஏராளமான பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. மழைநீர் வெளியேறும் குழாய் நிரம்பி வழிந்தது மற்றும் பலத்த காற்று காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூரையின் ஒரு பகுதி காற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலையத்துக்குள் அருவி போல் கொட்டும் மழைநீர்
விமான நிலையத்துக்குள் அருவி போல் கொட்டும் மழைநீர்

பயணிகள் அருகே மேற்கூரை விழுவது மற்றும் விமான நிலையத்தின் உள்ளே மழைநீர் அருவி போல் கொட்டுவதும், ஊழியர்கள் நீரை அகற்ற முயல்வதுமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக விமான நிலைய தலைமை அதிகாரி (சிஏஓ) உத்பல் பாருவா கூறுகையில், “பயணிகள் எந்த அசௌகரியத்தையும் சந்திக்காமல் இருக்க நான், தனிப்பட்ட முறையில் நிலைமையை கண்காணித்து வருகிறேன். புயல் மற்றும் பலத்த மழை காரணமாக, வானம் தெரிவுநிலை வெகுவாக குறைந்தது. இதன் காரணணாக 6 விமானங்கள் அகர்தலா மற்றும் கொல்கத்தாவுக்கு திருப்பிவிடப்பட்டன" என்றார். வானின் தெரிவுநிலை சீரடைந்ததும், கவுகாத்திக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து துவங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in