தடுப்பூசி போட்ட குழந்தைக்கு மூக்கிலிருந்து ரத்தம்; பதறிய பெற்றோர்: பிறந்த 45-வது நாளில் துயரம்

தடுப்பூசி
தடுப்பூசிதி இந்து (கோப்புப் படம்)

திண்டுக்கலில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை தடுப்பூசி போட்டதில் பரிதாபமாக உயிர் இழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுகன்யா. இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 45 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குரு பிரசாத் என பெயரிடப்பட்ட அந்தக் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டிய நாள் வந்திருப்பதாகவும், உடனே அரசு மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசியைப் போடுமாறும் அங்கன்வாடி பணியாளர் அழைப்பு விடுத்தார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நேற்று காலையில் சென்ற விஜயகுமார்-சுகன்யா தம்பதி தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட்டனர். இந்நிலையில் நேற்று மாலையில் குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கான மருந்துகளைக் கொடுத்தனர். இந்நிலையில் இன்று காலையில் குழந்தைக்கு சுகன்யா தாய்ப்பால் கொடுத்தார். அப்போது குழந்தையின் மூக்கு, வாய்ப்பகுதியில் ரத்தம் வந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சுகன்யா, விஜயகுமார் ஆகியோரும், அவர்களது உறவினர்களும் குழந்தை தடுப்பூசி போட்ட பின்பே திடீரென உயிரிழந்திருப்பதாகச் சொல்லி வாக்குவாதம் செய்தனர். இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இன்று நண்பகல் வரை பரபரப்பாக இருந்தது. மருத்துவ பணியாளர்கள் குழந்தையின் குடும்பத்தினரை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in