மூன்றுபேரைக் கடித்து முகத்தை சிதைத்த கரடி திடீர் மரணம்: நடந்தது என்ன?

மூன்றுபேரைக் கடித்து முகத்தை சிதைத்த கரடி திடீர் மரணம்: நடந்தது என்ன?

தென்காசி மாவட்டத்தில் மூன்றுபேரைக் கடித்து, கொடூரமாக முகத்தையே சிதைத்த கரடி திடீர் என உயிர் இழந்த சம்பவம் வனத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தென்காசி மாவட்டம், கருத்தலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைகுண்டமணி. டூவீலரில் மசாலாப் பொருள்களை வைத்து ஒவ்வொரு பகுதியாக சென்று வியாபாரம் செய்துவருகிறார். இவர் சிவசைலம் பகுதியில் இருந்து பெத்தான்குடியிருப்பு நோக்கி தன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கரடி திடீரென வழிமறித்து வைகுண்ட மணியை கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது.

அப்போது அதேவழியாக வந்த பெத்தான்பிள்ளை குடியிருப்பைச் சேர்ந்த நாகேந்திரன்(55), அவரது சகோதரர் சைலப்பன்(50) ஆகியோர் இதைப் பார்த்தனர். அவர்கள் வைகுண்டமணியைக் காப்பாற்றச் சென்றனர். அப்போது கரடி அவர்களையும் கொடூரமாகத் தாக்கியதோடு, மூவரின் முகப்பகுதியிலும் கடித்துக் குதறியது. கரடியின் கொடூரத் தாக்குதலில் மூவரின் முகம், கண் உள்ளிட்டப் பகுதிகள் சிதைந்து போயின. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிளாஸ்டிக் முக மாற்றுச் சிகிச்சைக்கு டீன் ரவிச்சந்திரன் பரிந்துரைத்தார். அதன்பேரில் மூவருக்கும் நேற்று பிளாஸ்டிக் முகமாற்று சிகிச்சை செய்யப்பட்டது. கரடி தாக்கி மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மூவருக்கும் திமுக சார்பில் தலா 15 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதிவாசிகள் மீது தொடர் தாக்குதல் நடந்தும் கரடியைப் பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவே கரடியை வனத்துறையினர் மயக்க ஊசிபோட்டுப் பிடித்தனர். தொடர்ந்து கரடியை மயக்கம் தெளிந்த பின்பு களக்காடு வனச்சரகத்திற்கு உள்பட்ட செங்கல்தேரி பகுதியில் நேற்றுமாலை விட்டனர்.

இந்நிலையில் அவர்கள் விட்டதில் இருந்து ஒருகிலோ மீட்டர் தூரத்தில் கரடி இன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “கரடி மயக்கம் தெளிந்துவிட்டபோது மிகவும் உற்சாகமாக துள்ளிக்குதித்துச் சென்றது. இப்போது கரடி, நுரையீரல் பாதிப்புக் காரணமாக இறந்திருப்பது தெரியவந்தது. இருந்தும், கரடிக்கு நுரையீரல் பாதிப்பு முன்பே இருந்ததா அல்லது மயக்க மருந்து கூடுதல் அளவில் செலுத்தப்பட்டதா என்றும் அறிக்கை கேட்டிருக்கிறோம் ”என விளக்கம் அளித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in