அசத்திய ஆத்தூர் ஊராட்சி... ஜல் ஜீவன் திட்டத்திற்காக விருது

ஜல் ஜீவன் திட்டம்
ஜல் ஜீவன் திட்டம்

கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக 100 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கிய ஆத்தூர் ஊராட்சி தேர்வாகியுள்ளது. இதையடுத்து ஊராட்சித்தலைவர் ஜம்ருத்பேகம் டெல்லியில் நடைபெறவுள்ள சுதந்திரதின நிகழ்ச்சியில் பங்கேற்க செல்ல உள்ளார். 

ஜல் ஜீவன் குடிநீர் திட்டம்
ஜல் ஜீவன் குடிநீர் திட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல்வீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தரும் பணிகள் நடைபெற்றுவருகிறது. 

இதில் 100 சதவீதம் பணிகளை பல கிராம ஊராட்சிகள் முடிக்கும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் ஆத்தூர் கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் தரப்பட்டு பணிகள் முழுமையடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

இதேபோல் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அணைப்பட்டி ஊராட்சி, ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தம், நிலக்கோட்டை ஒன்றியம் குள்ளிசெட்டிபட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, பழநி ஒன்றியம் தாமரைக்குளம், சாணார்பட்டி ஒன்றியம் கோம்பைப்பட்டி, தொப்பம்பட்டி ஒன்றியம் மானூர், அக்கரைப்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளும் 100 சதவீத பணிகளை  முழுமையாக முடித்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளன.  

இதில், ஆத்தூர் கிராம ஊராட்சி குடிநீர் ஆதாரம், முறையாக குடிநீர் வினியோகம் செய்வது, குடிநீரின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடத்திற்கு தேர்வாகியுள்ளது. இதை மத்திய அரசின் குழு அங்கீகரித்துள்ளது. 

இதையடுத்து ஆத்தூர் கிராம ஊராட்சித்தலைவர் ஜம்ருத்பேகம் கவுரவிக்கப்படும் வகையில், ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். ஆத்தூர் ஊராட்சியில் மொத்தம் 2761 வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் முழுமையாக வழங்கப்பட்டு விட்டன. இதை சாதித்ததற்காக ஜம்ருத்பேகம்,  டெல்லியில் நடைபெறவுள்ள சுதந்திரதின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார். 

ஆத்தூர் கிராம ஊராட்சி
ஆத்தூர் கிராம ஊராட்சி

அங்கு ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி கூறுகையில், ‘’திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 4.75 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுவரை 62 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன.  

ஆத்தூர் ஊராட்சியை போல் மேலும் சில ஊராட்சிகளில் 100 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. குடிநீர் ஆதாரம், வினியோகம், குடிநீரின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆத்தூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in