குடிக்க பணம் தர மறுத்த இருவர் கொடூர கொலை: 80 ரூபாய்க்காக போதை ஆசாமி வெறிச் செயல்

குடிக்க பணம் தர மறுத்த இருவர் கொடூர கொலை: 80 ரூபாய்க்காக போதை ஆசாமி வெறிச் செயல்

மது அருந்த பணம் கொடுக்காததால் ஆவேசத்தில் போதை ஆசாமி ஒருவர் இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. போதை ஆசாமியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே உள்ள உத்தங்குடியில் கடந்த 11-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த இதயத்துல்லா (50) அப்பகுதியில் உள்ள மரத்தடியில் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ஒத்தக்கடை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைதான சதீஷ்குமார்
கைதான சதீஷ்குமார்

உடற்கூராய்வின்படி, அந்த நபரின் தலையில் கல்லை போட்டு யாரோ மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அடுத்த நாள் 12-ம் தேதி ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊராட்சி மன்றம் அருகே உறங்கிக்கொண்டிருந்த ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பழனி என்ற ஆதரவற்ற நபரும் தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஒத்தக்கடை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியை தேடி வந்தனர். அப்போது, சிசிடிவி காட்சியில் தென்பட்ட சந்தேகத்திற்குரிய வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த வாலிபர் உத்தங்குடியைச் சேர்ந்த மலைச்சாமியின் மகன் சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ஊராட்சி மன்றம் அருகே நடைபெற்ற பழனி கொலை வழக்கில் அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், தான் மது அருந்துவதற்கு பழனியிடம் 80 ரூபாய் கேட்டதாகவும் அதை தர மறுத்ததால் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும், இதேபோன்று கடந்த 11-ம் தேதி நடந்த இதயத்துல்லா கொலையிலும் இவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரிடமும் மது அருந்துவதற்காக 80 ரூபாய் கேட்டதும், தர மறுத்ததால் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்ததும் தெரியவந்தது.

இச்சூழலில், கொலையாளியை கைது செய்து காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மது அருந்துவதற்காக 80 ரூபாய் கேட்டு, தர மறுத்த இருவரை அடுத்தடுத்து தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in