
மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு சவாலான இலக்கினை இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா அபார சதம் அடித்துள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ்வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்கள். நியூசிலாந்து பந்துவீச்சில் சிக்சர் மற்றும் பவுண்டரி மழையை இருவரும் பொழிந்தனர். இவர்களின் விக்கெட்டை கழட்ட பவுலர்கள் எடுத்த முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
ஒரு வழியாக ப்ரேஸ்வெல் 26.1 ஓவரில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை எடுத்தார். ரோகித் 85 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரியுடன் 101 ரன்களை எடுத்திருந்தார். அதன்பின்னர் சுப்மன் கில்லும் 78 பந்துகளில் 5 சிக்சர் 13 பவுண்டரியுடன் 112 ரன்களை எடுத்து அவுட்டானார். அதன்பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. விராட் கோலி 36, இசான் கிஷான் 17, சூர்யகுமார் 14, ஹர்திக் பாண்ட்யா 54, சுந்தர் 9, ஷர்துல் தாக்கூர் 25, குல்தீப் யாதவ் 3, உம்ரான் மாலிக் 2 ரன்கள் எடுத்தனர். இதன் காரணமாக இந்தியா 50 ஓவர்களில் 385 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தின் தரப்பில் டஃபி மற்றும் டக்னர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். நியூசிலாந்து 386 ரன்கள் என்ற இலக்குடன் ஆடவுள்ளது.