சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை: கூட்டாளிகளுக்கும் தண்டனை

சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை: கூட்டாளிகளுக்கும் தண்டனை

பல்வேறு சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் உள்ள  வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த  20 சிலைகள் கடந்த 2000- ம் ஆண்டு காணாமல் போனது.  அந்த சிலைகள்  கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக  கடந்த 2008-ம் ஆண்டு சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அவர்களின் விசாரணையில்  இந்த கொள்ளை சம்பவத்தில் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு  தொடர்பு இருப்பது தெரியவந்தது. அமெரிக்கா நியூயார்க்கில் கலைக்கூடம் நடத்திய சுபாஷ் சந்திர கபூர், இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு சிலைகளை கடத்தியதாக   சர்வதேச போலீஸ் உதவியுடன் கடந்த 2012-ம் ஆண்டில்  கைது செய்யப்பட்டு  தமிழகம் அழைத்து வரப்பட்டார். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 20 சிலைகளில் 6 சிலைகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிலைக் கடத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது  நிரூபிக்கப்பட்டுள்ளதால்  சுபாஷ்சந்திரகபூர், சஞ்சீவி அசோகன், பாக்கியகுமார் ஆகிய 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், மாரிச்சாமி, ஸ்ரீராம் என்ற சுலோகு, பார்த்திபன் ஆகிய 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுபாஷ் சந்திரகபூருக்கு ரூ. 4 ஆயிரமும், மீதமுள்ள 5 பேருக்கு தலா ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து போலீஸார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்தியச் சிறைக்கு 6 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in