`நட்பாக பழகுவதை தாங்கிக்கொள்ள முடியாதவர்களின் செயல் இது': மாணவ- மாணவிகளிடம் உறுதியளித்த பெண் மேயர்

களத்திற்கு வந்த மேயர் ஆர்யா ராஜேந்திரன்
களத்திற்கு வந்த மேயர் ஆர்யா ராஜேந்திரன்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாணவர்கள் மடியில் அமர்ந்தும், மிக நெருக்கமாகவும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சுவாரஸ்ய சம்பவம் இன்று நடைபெற்றது. இவ்விசயத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் உடனடியாகக் களத்திற்கு வந்தார். மாணவ, மாணவிகளுக்கு அவர் கொடுத்த வாக்குறுதி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிடி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் அருகிலேயே பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இங்கு அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மிக நெருக்கமாக இருந்து வெகுநேரம் பேசுவதாக சர்ச்சை எழுந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மர்மநபர் ஒருவர் நேற்று இரவோடு, இரவாக இந்த பயணிகள் நிழற்குடையை இடித்தார்.

நட்பு அடிப்படையில் சக தோழிகளுடன் பேசுவதைப் பிடிக்காத யாரோ சிலர் இப்படிச் செய்ததைப் பார்த்து காலையில் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இடித்து அகற்றிய செங்கல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைப் பார்த்தனர். அவற்றை எடுத்து அடுக்கி வைத்து முன்னைவிட மிக நெருக்கமாகவும், சக தோழிகளை மடியில் தூக்கிவைத்துக்கொண்டும் அமர்ந்தனர்.

களத்துக்கு வந்த மேயர்

இதுகுறித்துக் கேள்விப்பட்டதும் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மாணவர்கள் மடியில் அமர்ந்து மாணவிகள் கவனம் ஈர்த்த பயணிகள் நிழற்குடை பகுதிக்குச் சென்றார். அங்கே நிழற்குடையின் இருக்கைகள் அனைத்தும் சேதமாகியிருந்தது. உடனே மாணவ, மாணவிகள் மத்தியில் பேசிய ஆர்யா ராஜேந்திரன், “உங்களின் கோரிக்கை நியாயமானது. நட்பாக ஒரு ஆணும், பெண்ணும் பழகுவதை தாங்கிக்கொள்ள முடியாத மர்மநபர்கள் இப்படிச் செய்துள்ளனர். இந்த நிழற்குடையில் மாநகராட்சி சார்பில் மீண்டும் இருக்கைவசதிகள் செய்துதரப்படும்” என்றார். இதனால் மடியில் அமர்ந்து நூதனப் போராட்டம் நடத்திய யுவ, யுவதிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in