கடலில் குளித்த இருவரைச் சுருட்டி இழுத்துச் சென்ற அலை: கரையில் காத்திருந்த நண்பர்கள் கண் முன் நடந்த சோகம்

மாணவனின் தாய்
மாணவனின் தாய்

புதுச்சேரி அருகே சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் கடலில் குளித்த மாணவர்கள் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலம் கோலியனூர் அருகே உள்ள மங்களம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அய்யனார் (17), தேவி மகன் அஸ்வின் (17) . இவர்கள் இருவரும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் செய்துவிட்டு, அனுமதிக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்கள் நண்பர்களுடன் அரியாங்குப்பம் அருகே உள்ள சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு இன்று குளிப்பதற்காக வந்துள்ளனர்.

அவர்கள் கடலில் இருவரும் குளித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அமாவாசைக்கு அடுத்த நாள் என்பதால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. ஆனால், ஆபத்தை அறியாமல் இருவரும் கடலுக்குள் இறங்கி சென்றுள்ளனர். இந்த நிலையில் வேகமாக வந்த பெரிய அலை அவர்கள் இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது.

குளித்துக் கொண்டு இருந்த நண்பர்களை திடீரென காணாமல் போனதால் கரையில் இருந்த அவர்களது நண்பர்கள் பதறிப் போய் கடலில் இறங்கி அவர்களைத் தேடியுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கடலுக்குள் இறங்கி தேடினர். ஆனால் இருவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அதனையடுத்து மீனவர்கள் படகுகளில் ஏறி கடலுக்குள் தேடிச் சென்ற நிலையிலும் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து கடலோர காவல் படை மற்றும் அரியாங்குப்பம் காவல் நிலைய போலீஸார் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் வந்து தேடிப் பார்த்தனர். மாலை ஆறு மணி வரையிலும் அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் தெரியாததால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

படங்கள் எம்.சாம்ராஜ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in