சாப்பாட்டுடன் எஸ் பி அலுவலக வாயிலில் போராட்டம் நடத்தும் மாணவர்கள்
சாப்பாட்டுடன் எஸ் பி அலுவலக வாயிலில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் சாப்பாட்டு தட்டுகளுடன் மன்னர் கல்லூரி மாணவர்கள் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகை

சாப்பாட்டு தட்டுகளுடன் மன்னர் கல்லூரி மாணவர்கள் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகை

தங்கள் விடுதியில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்று கூறி புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் சாப்பாட்டு தட்டுகளுடன்  எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டையில் மாட்சிமை தங்கிய  மன்னர் கல்லூரி  இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் மாணவர்களுக்கு  விடுதிகள் உள்ளன. அதில் பட்டியல் இன மாணவர்கள் தங்கியிருக்கும் அம்பேத்கர் விடுதியில் மாணவர்களுக்கு அண்மைக்காலமாக தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு மிக மோசமானதாக இருந்ததால் அந்த உணவு மற்றும் சாப்பாட்டு தட்டுகளுடன் அருகில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மாணவர்கள் அங்கே அலுவலகத்திற்கு எதிரில் சாப்பாடு மற்றும் சாப்பாட்டு தட்டுகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  அதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து காவல் அதிகாரிகளும்,  அம்பேத்கர் கல்லூரி விடுதி, மற்றும் மன்னர் கல்லூரியில் இருந்து நிர்வாகிகளும் வந்து  மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி தரமான உணவு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாப்பாடு சரியில்லை என்று எஸ்.பி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in