பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் பாம்பு!

பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் பாம்பு!

மேற்கு வங்கம் மாநிலத்தின் பள்ளி ஒன்றில் பரிமாறப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்ததும், உணவை உண்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுமாக அதிர்ச்சி கிளம்பியுள்ளது.

பீர்பும் மாவட்டம் மயூரேஸ்வர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இந்த சம்பவம் நடந்தேறி இருக்கிறது. திங்கள் மதியம் வழக்கம்போல மதிய உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. முன்னாதாக உணவுண்ட மாணவர்களில் ஒருசிலர் வாந்தி எடுக்கவே, மதிய உணவு ரகங்கள் முழுவதுமாக ஆராயப்பட்டிருக்கிறது. இதில் உணவுப் பாத்திரம் ஒன்றில் முழு நீள பாம்பு கிடந்ததும் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து மதிய உணவு அருந்தியவர்களில் 26 மாணவர்கள் ராம்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு கூடிய மாணவர்களின் பெற்றோர், தலைமையாசிரியர் உட்பட பலரது வாகனங்களை அடித்து நொறுக்கினர். அதற்குள் சம்பவ இடத்தில் ஆஜரான போலீஸார், பொதுமக்களுக்கு பயந்து பதுங்கியிருந்த தலைமையாசிரியரை மீட்டு விசாரணை நடத்தினர்.

பாத்திரம் ஒன்றில் பாம்பு இருந்ததும் அதனை அறியாத சமையலர் உணவுப் பொருட்களுடன் சேர்த்து வேகவைத்து பரிமாறியதும் விசாரணையில் தெரிய வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் உடல் நிலையில் ஆபத்தான அறிகுறிகள் ஏதும் இல்லை என மருத்துவர்கள் தெரித்துள்ளனர். எனினும் அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மதிய உணவில் பூச்சிகள் முதல் பல்லி வரை விழுந்த சம்பவங்களின் மத்தியில், முழு நீள பாம்பு கிடந்ததும் அந்த உணவை உட்கொண்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அப்பகுதியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in