உடைந்து விழும் அபாயத்தில் மரப்பாலம்; அச்சத்தில் பயணிக்கும் மாணவர்கள்: விடிவு காலம் பிறக்குமா?

உடைந்த தட்டிப் பாலம்
உடைந்த தட்டிப் பாலம்

நாகை அருகே விளாம்பாக்கத்தில் ஆபத்தான முறையில் தட்டிப்பாலத்தில் ஆற்றை கடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் பெண்கள் பேருந்து வசதி கூட இல்லாத தங்களுக்கு ஆம்புலன்ஸ் போகும் அளவுக்காவது சிமெண்ட் பாலம் கட்டித்தர வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளனர்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த ஓக்கூர் ஊராட்சியில் விளாம்பாக்கம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்திற்கு இதுநாள் வரை அரசுப் பேருந்தோ, தனியார் பேருந்தோ இயக்கப்படவில்லை.  நாகப்பட்டினம் செல்வதற்கு 10 கிலோ மீட்டர் நடந்து வந்து கீழ்வேளூரில்தான் பேருந்து ஏற வேண்டும். அதேபோல் 15 கிலோ மீட்டர் நடந்து சென்று ஓக்கூரில் பேருந்து ஏறி நாகப்பட்டினம் செல்ல வேண்டிய சூழ்நிலைதான் இன்றுவரை உள்ளது. 

அதேபோல விளாம்பாக்கத்தில் இருந்து கீழ்வேளூர்,  நாகப்பட்டினம், திருவாரூரில் படிக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், வயல் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும்  கோகூர் சென்று பேருந்து ஏற வெட்டாற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

இதற்காக விளாம்பாக்கம் -  கோகூர் இடையே ஓடும் வெட்டாற்றில் பாலம் கட்டித்தர வேண்டும் என்று இக்கிராமமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை பாலம் கட்டித் தராததால் கிராமத்தினரே தட்டிப்பாலம் அமைத்து அதில் சென்று வருகிறார்கள். மழை,  வெள்ளக் காலத்தில் அந்த தட்டிப்பாலம் ஆற்றில் அடித்து செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் ஆற்றில் தற்போது உடைந்த நிலையில் இருக்கும் தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது தங்களுடைய குழந்தைகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இந்த பாலத்தில் சென்று வருவதாகவும், உடைந்த பாலத்தில் செல்லும்போது  புத்தகப்பையோடு ஆற்றில் விழுந்து விடுவதாகவும், பலகை இடுக்கில் கால் சிக்கி அடிக்கடி தண்ணீருக்குள்  விழுந்து விடுவதாகவும் வருத்தத்துடன் கூறினர்.

அவசர மருத்துவ சிகிச்சைக்காக இருசக்கர வாகனம் கூட செல்ல வழி இல்லாமல் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் செல்லும் அளவுக்காவது சிமெண்ட் பாலம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in