மதுரை ரயில் நிலையத்துக்கு படையெடுத்த இளைஞர்கள்... காவல்துறையுடன் தள்ளுமுள்ளு: களேபரமான `அக்னிபத்' போராட்டம்

போராட்டக்காரர்களை கைது செய்த போலீஸார்
போராட்டக்காரர்களை கைது செய்த போலீஸார்

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50- க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆட்சேர்க்கும் 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிஹார், ஜார்க்கண்ட், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென் மாநிலங்களான தெலங்கானா உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில், பல்வேறு மாநிலங்களில் ரயில்கள் எரிக்கப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

'அக்னிபத்' திட்டத்திற்கான எதிர்ப்பும், போராட்டமும் வலுத்து வரும் நிலையில், மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக எஸ்எஃப்ஐ, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன. இதன் அடிப்படையில், இன்று காலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து 50- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக மதுரை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலுக்கு சென்றனர்.

தொடர்ந்து, ரயில் நிலையத்தினுள் சென்று ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது, நுழைவு வாயிலில் காவல்துறையினர் பேரிகேட் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயற்சித்த போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், மத்திய அரசிற்கு எதிராகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 50- க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து மதுரை சிம்மக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in