
ஒடிசா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து வீடு திரும்பிய மாணவன், பாலத்தில் இருந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் சரளா காலனியைச் சேர்ந்தவர் கிளிஃபோர்டு குஜ்ஜூர்(14). இவர் அப்பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு பள்ளியில் நேற்று தேர்வு நடந்தது. இதன் பின் தேர்வு முடிந்து மாலையில் அவர் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
சம்பல்பூர் லட்சுமி டாக்கீஸ் தெரு அருகே உள்ள பறக்கும் மேம்பாலத்தில் இருந்து திடீரென கிளிஃபோர்டு கீழே விழுந்தார். இதில் தலை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு புர்லா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிஃபோர்டு, இன்று காலை உயிரிழந்தார். மாணவன் கிளிஃபோர்டு பாலத்தின் மீது சைக்கிள் மோதி கீழே விழுந்து இறந்தாரா அல்லது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.