மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான வாலிபருக்கு ஒருநாள் போலீஸ் காவல்

மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான வாலிபருக்கு ஒருநாள் போலீஸ் காவல்

மாணவி சத்யா கொலை வழக்கில் கைதான வாலிபர் சதீஷை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் மோகனாம்பாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி தனியார் கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்ற வாலிபரை ரயில்வே போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சத்யா கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு கடந்த 14-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை அதிகாரியாக சி.பி.சிஐ.டி காவல் ஆய்வாளர் ரம்யா நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொலையாளி சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் கடந்த வாரம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த முறை சதீஷை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது வழக்கறிஞர்கள் தாக்க முயன்ற சம்பவம் காரணமாக பாதுகாப்பு கருதி நீதிமன்ற விசாரணை காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்நிலையில் மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் கொலையாளி சதீஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், ஒரு நாள் மட்டுமே காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் மோகனாம்பாள் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 15-ம் தேதி சம்பவ இடமான பரங்கிமலை ரயில் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீஸார் முதற்கட்ட விசாரணையை நடத்தி தடயங்களை சேகரித்ததுடன், வழக்கு தொடர்பான ஆவணங்களையும் ரயில்வே போலீஸாரிடம் இருந்து பெற்றனர். பின்னர் கொல்லப்பட்ட மாணவி சத்யாவின் தாயார் ராமலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடமும், அன்றையதினம் ரயிலை ஓட்டி வந்த ரயில் ஓட்டுநர் கோபால் என்பவரிடமும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கொலையாளி சதீஷை நாளை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த பின் மறுநாள் காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in