அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது: பள்ளி மாணவன் பலி

அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது: பள்ளி மாணவன் பலி

நாமக்கல்லில் பள்ளிப் பேருந்துக்கு காத்திருந்த மாணவன் மீது கல்லூரி பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா அருகே நாரைக்கிணறு பிரிவு, செம்மண்காடு பேருந்து நிறுத்தம் உள்ளது. இதில் ஆயில்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்குச் செல்ல 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபாகரன்(10) மற்றும் கல்லூரி மாணவிகள் மதுமிதா (18), கிருத்திகா (18) ஆகியோர் காத்திருந்தனர்.

அப்போது முள்ளுக்குறிச்சியில் இருந்து ராசிபுரம் வழியாக நாமக்கல் நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து மிக அதிவேகமாக வந்துள்ளது. அப்போது எதிர் புறமாக வந்த லாரியில் மோதாமல் இருக்க கல்லூரி பேருந்து ஓட்டுநர் அன்பழகன் பேருந்தை இடது புறமாக திரும்பினார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது. இதில் பள்ளி வாகனத்துக்கு காத்திருந்த 5 -ம் வகுப்பு மாணவன் மற்றும் கல்லூரி மாணவிகள் இருவர் மீது மோதியது. இதில் 5-ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு கல்லூரி மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து ஆயில்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த கல்லூரி மாணவிகள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in