பலாத்காரம் செய்வதை எதிர்த்து போராடிய மாணவியை கட்டாயப்படுத்தி 4 பேர் சானிடைசர் குடிக்க வைத்தனர். இதன் காரணமாக அந்த மாணவி உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மத் லட்சுமிபூரைச் சேர்ந்த உமேஷ் ரத்தோர்(21) உள்ளிட்ட நான்கு இளைஞர்கள் சிறுமியைத் தடுத்து நிறுத்தி நடுரோட்டில் அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர்.
ஆனால், அவர்களிடமிருந்து விடுபட அந்த மாணவி போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், வலுக்கட்டாயமாக அந்த சிறுமியின் வாயில் சானிடைசரை ஊற்றியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற மாணவியின் சகோதரரையும் அந்த கும்பல் தாக்கியது. அத்துடன் இந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளது. உ.பியில் இந்த சம்பவம் கடந்த 27-ம் தேதி நடந்துள்ளது.
சானிடைசரை குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, இசத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரைத் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவிக்கு எதிராக நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.