தனியார் கல்லூரியில் மாணவி பலி: 4-வது மாடி படிக்கட்டில் தவறி விழுந்தாரா?

தனியார் கல்லூரியில் மாணவி பலி:  4-வது மாடி படிக்கட்டில் தவறி விழுந்தாரா?

சென்னை தனியார் கல்லூரியின் 4-வது மாடி படிக்கட்டில் தவறி விழுந்து மாணவி இறந்ததாக கூறப்படும் சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சவுகார்ப்பேட்டை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுனில் சர்மா. இவரது மனைவி சீமா ஷர்மா. மிண்ட் தெருவில் சுனில் சர்மா மருந்தகம் நடத்தி வருகிறார். இவருக்கு ரோஷினி சர்மா(20) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சென்னை ஜெயின் கல்லூரியில் ரோஷினிசர்மா பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். பத்து நாள் விடுமுறைக்குப் பின் இன்று கல்லூரிக்கு அவர் சென்றார். அப்போது கல்லூரிக்கு அவர் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பதற்றமடைந்த ரோஷினி சர்மா 4-வது மாடி படிக்கட்டில் வேகமாக ஏறும் போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரின் அலறல் சத்த்ம் கேட்டு ஓடி வந்த கல்லூரி பேராசிரியர்கள், ரோஷினியை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலறிந்த வேப்பேரி போலீஸார் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். வேப்பேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தானே கீழே விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் மரணம் ஏற்பட்டதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மாணவி இறந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in