பறிபோன அண்ணனின் உயிர்; இழப்பை தாங்காமல் கதறிய தம்பி; இரட்டை சகோதரர்கள் பிரிவால் கண்கலங்கிய மக்கள்!

பறிபோன அண்ணனின் உயிர்; இழப்பை தாங்காமல் கதறிய தம்பி; இரட்டை சகோதரர்கள் பிரிவால் கண்கலங்கிய மக்கள்!

மழையால் பாதிக்கப்பட்ட வீட்டுச் சுவரை அகற்றும் போது, இரட்டை சகோதரர்களில் ஒருவர் சிக்கி உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர்களுக்கு சுதர்சன் மற்றும் சூர்யா என மகன்கள். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரர்கள். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த நிலையில் தினயால் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாகவே பெய்த மழையில் செல்வம் வீட்டின் பின்புறம் உள்ள சுவர் ஈரத்தன்மையுடன் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை வீட்டின் பின்புறம் உள்ள அறையை அகலப்படுத்துவதற்காக நடுவிலிருந்த சுவரை சுதர்சன் இடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மற்றொரு சுவர் சுதர்சன் மீது விழுந்தது. இதில் இடிபாடுகள் மத்தியில் சுதர்சன் சிக்கிக்கொண்டு அலறினார்.

சுதர்சனின் அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இடிந்த சுவருக்கு அடியில் சிக்கிய சுதர்சனை உயிரிழந்த நிலையில் மீட்டனர். அவருடைய உடலை ஆட்டோவில் ஏற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே சுதர்சன் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். இரட்டையர்களில் ஒருவரான சுதர்சன் இறந்ததைத் தம்பி சூர்யாவால் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுத சம்பவம் காண்போரைக் கண்கலங்க வைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in