விடைத்தாள் மாறிவிட்டது; கலந்தாய்வுக்கு என்னையும் அனுமதியுங்கள்:ஐகோர்ட்டில் மாணவி மனு

விடைத்தாள்  மாறிவிட்டது; கலந்தாய்வுக்கு  என்னையும் அனுமதியுங்கள்:ஐகோர்ட்டில் மாணவி மனு

தன்னுடைய நீட் தேர்வு விடைத்தாள் மாறி விட்டது, அதனால் மருத்துவக் கலந்தாய்வில் தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் தனது விடைத்தாள் மாறி விட்டதாக கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், தேர்வில் 720-க்கு 600-க்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண்கள் பெற்றதற்கான விடைத்தாள் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தேர்வில் 13 கேள்விகளுக்கு மட்டும்தான் அவர் விடையளிக்காத நிலையில், அவருக்கு அனுப்பப்பட்ட விடைத்தாளில் 60 கேள்விகள் விடையளிக்கப்படாமல் விடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விடைத்தாளின் இடது புறம் இடம் பெற்றிருந்த தனது சுய விவரங்கள் அடங்கிய பகுதி வேறு மாணவியின் விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என தனது சந்தேகத்தைத் தெரிவித்துள்ள அந்த மாணவி, விடைத்தாளில் உள்ள கைரேகையை சரி பார்த்தால் தனது விடைத்தாள் எது என கண்டுபிடிக்க முடியும் எனவும், தனது விடைத்தாளை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும், தன்னை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கும்படி உத்தரவிடவும் அவர் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in