என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான் : வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு ரயில் முன் பாய்ந்த மாணவன்

என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான் : வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு ரயில் முன் பாய்ந்த  மாணவன்

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்த மணப்பாறையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ரயிலில்  பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் அடுத்த மலையாண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி  மகன்  சந்தோஷ் (22). இவர்  தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். இந்நிலையில்  கடந்த 6 மாத காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி வீட்டிலிருந்து நகை, பணம் ஆகியவற்றை வீட்டிற்குத் தெரியாமல் எடுத்து சென்று விளையாட்டில் இழந்துள்ளாராம்.

கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.4) வீட்டிலிருந்த மோதிரத்தைக் காணவில்லை என்று  சந்தோஷிடம் அவரது பெற்றோர் செல்போனில் கேட்டுள்ளனர். அதற்கு நான் நகை, பணத்துடன் வீட்டிற்கு வருகிறேன் என கோபமாக சந்தோஷ் கூறினாராம். அதன்பின் நேற்று (அக்.5) இரவு 9.50 மணியளவில் “என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான், அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.” என ஸ்டேட்டஸ் வைத்து விட்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். அதன் பின் சந்தோஷை பெற்றோர் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இந்நிலையில் மணப்பாறை ரயில் நிலையம் அடுத்த கீரைத்தோட்டம் என்னும் பகுதியின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதை திருச்சி ரயில்வே போலீஸார்  மீட்டு அது யார் என்பதை விசாரணை செய்தனர். அப்போதுதான் அது  சந்தோஷ் என  அடையாளம் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்காக அவரது உடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து உயிரையும் பறிகொடுத்த இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in