வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி; படுத்த படுக்கையான மகள்: கண்ணீர் வடிக்கும் பெற்றோர்

வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி; படுத்த படுக்கையான மகள்: கண்ணீர் வடிக்கும் பெற்றோர்

திருநெல்வேலியில் அரசுப்பள்ளியில் தன் மகளுக்கு கரோனா தடுப்பூசி உரிய முன் பரிசோதனை மற்றும் பெற்றோர் சம்மதம் இல்லாமல் செலுத்தியதால் தற்போது தன் மகள் படுக்கைக்கு சென்றுவிட்டதாக இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி நல்லதாயியின் தந்தை பருத்திப்பாடு கிராமத்தை சேர்ந்த மகராஜன் கூறுகையில், “எனக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் மூன்றாவது மகளான நல்லத்தாய் மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள். அந்த பள்ளிகூடத்தில் கடந்த மார்ச் மாதம், 29-ம் தேதி என் மகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினர். இதில் பெற்றோர் என்னும் முறையில் எங்கள் அனுமதியும் வாங்கவில்லை. என் மகள் தடுப்பூசி போட மறுத்துள்ளார். ஆனால் தடுப்பூசி போடாவிட்டால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத முடியாது என மிரட்டி, ஊசியை செலுத்தினர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட என் மகளுக்கு காய்ச்சல் வந்தது. அருகில் மருத்துவமனையில் காட்டினோம். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சாப்பிட்ட பின் வாந்தி, முதுகுவலி என வந்தது. ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தாள் நல்லத்தாய். நெல்லை அரசு மருத்துவமனையில் மூளையில் காசநோய் வந்திருப்பதாகச் சொன்னார்கள். மீள்வதும், மீண்டும் முடங்குவதுமாக இருந்த என் மகள் கடந்த மூன்று மாதங்களாக ஆள் அடையாளம் கூடத் தெரியாமல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக உள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஆஸ்பத்திரியும், வீடுமாக அலைவதால் என்னால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. பொறியியல் படிக்கும் மூத்த மகன், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் இளைய மகள் ஆகியோரும் இதனால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

என் மகளுக்கு முன்பு உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பள்ளியில் கரோனா தடுப்பூசி போட்ட பின்புதான் இந்த நிலை வந்தது. ஆட்சியர் என் மகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும். இதேபோல் இதேபோல் பெற்றோரின் சம்மதம் இன்றி தடுப்பூசி செலுத்திய பள்ளி நிர்வாகம், தடுப்பூசி செலுத்திய செவிலியர்கள் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளேன். ஆட்சியர் நல்லது செய்வார் என நம்புகிறேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in