சிறப்பு முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சிறையை முற்றுகை: திருச்சியில் பரபரப்பு

திருச்சி மத்திய சிறை வாசலில் போராட்டம் நடத்திய திருமுருகன்காந்தி உள்ளிட்டவர்கள்
திருச்சி மத்திய சிறை வாசலில் போராட்டம் நடத்திய திருமுருகன்காந்தி உள்ளிட்டவர்கள்

திமுகவைப் போலவே திமுக அரசும் சிறப்பு முகாம்களில் ஈழத்தமிழர்களை அடைத்து வைத்து வதைக்கிறது என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதை போல் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஈழத்தமிழர் உமா ரமணன் என்பவர் முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அதைத் தொடர்ந்து அங்குள்ளவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முகாமில் உள்ளவர்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து சிறப்பு முகாமில் உள்ளவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழக ஜனநாயக கட்சி கேகே ஷெரீப், ஆகியோர் தலைமையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி இன்று திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமை முற்றுகையிட போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 100-க்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி கூறுகையில், " அதிமுகவைத் தொடர்ந்து திமுகவும் சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ளது. நீதிமன்றத்தில் பிணை கொடுத்தும் கூட அவர்களை விடுவிக்கப்படாமல் வைத்துள்ளனர். திமுக அரசு இலங்கையில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கினாலும் இங்கிருக்கும் ஈழத் தமிழர்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை.

ஈழத் தமிழர்கள் மற்றும் சிறப்பு முகாம் விஷயத்தில் தமிழக திமுக அரசு ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதன்மூலம் சிறப்பு முகாமை உடனடியாக மூட வேண்டும். மேலும், சிறப்பு முகாமில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்" என திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in