சுருட்டியடிக்கும் சூறைக்காற்று: விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு படகு சேவை ரத்து

விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் நினைவு மண்டபம்

கன்னியாகுமரியில் கடுமையான சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் எதிரொலியாக விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவ.16-ம் தேதி திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் செல்கின்றனர். சபரிமலை சீசன் நேரத்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கும் ஐயப்ப பக்தர்கள் வருவது வழக்கம்.

கன்னியாகுமரியைப் பொறுத்தவரை கோடை விடுமுறை விடப்படும் ஏப்ரல், சபரிமலை சீசன் காலமான நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலமும் முக்கிய சீசன் நேரமாகும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் இப்போது அதிகளவில் முகாமிட்டுள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் ஆன்மிக அன்பர்களும், சுற்றுலாப் பயணிகளும் கன்னியாகுமரி கடல் நடுவே இருக்கும் விவேகானந்தர் பாறைக்கும் சென்று தரித்து திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குகன், விவேகானந்தா, தாமிரபரணி என்ற மூன்று படகுகளும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படகில் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று திரும்பிவர 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை ஒருமாத காலத்தில் மட்டுமே 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

முந்தைய இரு ஆண்டுகள் கரோனா தொற்று பரவலின் காரணமாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அதிக கெடுபிடிகள் இருந்தன. இப்போது அவை இல்லாததால் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் உள்ளது. அதன் காரணமாகவே குமரியிலும் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. தினமும் சபரிமலை செல்லும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் கடுமையான சூறைக்காற்று காலை முதலே வீசிவருகிறது. இதன் எதிரொலியாக இன்று விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே திருவள்ளுவர் சிலையில் பராமரிப்புப் பணிகள் நடந்துவருவதால் அதற்கும் படகுசேவை இல்லை. இதனால் கடல் வழியே படகு வழியாகப் பயணித்து விவேகானந்தரை தரிசிக்கும் நோக்கத்தோடு வந்த ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in