
சென்னையில் முறையான பதிவு எண்பலகை இல்லாத வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை போக்குவரத்துக் காவல்துறை சமூக வலைதளத்தின் மூலம் போக்குவரத்து மேம்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில், பெரும் பங்கு வகிப்பது குறித்து போக்குவரத்துக் கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘’சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சமூகவலைதளங்கள் மற்றும் 9003130103 என்ற எண்ணிலிருந்தும் பொதுமக்கள் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். கடந்த சில நாட்களாக போக்குவரத்து விதிமீறல்களை கொண்ட முறையற்ற பதிவு எண் பலகை உள்ள வாகனங்கள் மீது அபராதம் செலுத்தி வருகின்றனர். இதுவரை 43 ஆயிரம் வாகன உரிமையாளர்கள் சரியான பதிவு எண் பலகை மாற்றியுள்ளனர்.
வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள முக்கிய வாகனம் நிறுத்தும் இடங்களில் முறையற்ற பதிவு எண் பலகை கொண்ட வாகனங்கள் குறித்த சோதனை நடைபெற உள்ளது. முறையான பதிவெண் கொண்ட பலகை இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மூன்று நாட்களில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாத 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவாகி ரூ. 49 லட்ச ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது அபராதம் தொடர்ந்து வசூலித்து வரப்படுகிறது. அபராதம் செலுத்தாதவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் ‘’ என்றார்.