‘ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்!’

கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசு அழுத்தம்
‘ஆன்லைன் சூதாட்ட
விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்!’

அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசு அழுத்தம் தந்துள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக நிலவுகிறது. சாமானிய மக்களின் சேமிப்பு, வருமானம் ஆகியவற்றை பறிப்பதோடு, உச்சமாய் உயிர்களையும் உருவி வருகிறது. எனவே பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் தன் பங்குக்கு தனியாக நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

2 மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட உத்தரவின் மூலம், சூதாட்ட விளம்பரங்களை வெளியிட தடை அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் விதிக்கப்பட்டது. மேலும் பண்பலை வானொலிகள் உட்பட அனைத்து ’ஓடிடி’களுக்கும் இந்த உத்தரவு விரிவுபடுத்தப்பட்டது. நேரடி விளம்பரங்கள் மட்டுமன்றி மறைமுகமாக வெளியாகும் ’பதிலி’ விளம்பரங்களுக்கும் இந்த தடை உத்தரவு பொறுந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த மறைமுகமாக வெளியாகும் பதிலி விளம்பரங்கள், மத்திய அரசு முன்னெடுக்கும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாகி வருகிறது. அதாவது நேரடி விளம்பரங்களாக அமையாது, விளம்பரத்தின் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையிலான அவற்றின் பதிலிகள் சூடு பிடித்தன.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல்வேறு விளம்பரங்களிலும், இவ்வகையிலான பதிலி விளம்பரங்களே வெற்றிகரமாக வலம் வருவது கண்கூடு! சாராய நிறுவனங்கள் சார்பில் வெளியாகும் சோடா விளம்பரம், குட்கா நிறுவனம் சார்பிலான வாசனை திரவிய விளம்பரங்கள் போன்றவை இதற்கான உதாரணங்களாகும். இந்த வகையில் கூகுள் மற்றும் யூட்யூப் தளங்களில், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் தங்கு தடையின்றி வெளியாகி வருகின்றன.

இந்தியாவில் வெளியாகும் மறைமுக விளம்பரங்கள்
இந்தியாவில் வெளியாகும் மறைமுக விளம்பரங்கள்

அரசின் தடை உத்தரவை பொருட்படுத்தாத இந்த பதிலி விளம்பரங்களுக்கு எதிரான மற்றுமொரு நடவடிக்கையாக, கூகுள் நிறுவனத்துக்கு புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன. கூகுள் தேடுபொறியின் வாயிலாக இந்த விளம்பரங்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு சர்வர்கள் வாயிலாக இந்தியர்களை குறிவைக்கும் ஆன்லைன் சூதாட்ட வலைகள் நுட்பமாக விரிக்கப்படுகின்றன.

மேலும் இந்த ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் முறைகேடான வகையில், சாமானிய இந்தியர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய்களை சூறையாடி வருகின்றன. கண்ணிகளாக செயல்படும் பல்வேறு ஏஜெண்டுகளின் வாயிலாக மாதந்தோறும் சுமார் ரூ.5,000 கோடி, இந்த வகையில் பறிக்கப்படுவதாக அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தொகை, ஆன்லைன் சூதாட்டங்களை வலைவிரிக்கும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு முறைகேடான வழியில் செல்வது குறித்தும் இந்தியா கவலை கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in