நித்தம் வளரும் சுலைமான்: உலக சாதனைக்கான உயரம் 9.6 அடி

சுலைமான்
சுலைமான்Twitter

வடக்கு கானாவில் வாழும் சுலைமான் அப்துல் சமத்தின் உயரம் 9.6 அடி. உயரத்தில் தற்போதைய உலக சாதனையான துருக்கியின் சுல்தான் கோசனைவிட, சுலைமான் ஓரடிக்கும் மேல் உயரமானவர். உலகில் உயரமானவர்கள் எவரேனும் போட்டிக்கு வந்தாலும் விரைவில் அவர்களை பின்தங்கச் செய்துவிடுவார் சுலைமான். காரணம் அவர் தினம்தோறும் வளர்ந்தபடி உள்ளார்.

வடக்கு கானாவின் குக்கிராமத்தில் பிறந்த சுலைமான், பள்ளிப் படிப்பை முடித்ததுமே அருகிலுள்ள நகரங்களுக்கு பிழைக்கச் சென்றார். வாகன ஓட்டுநராக வேண்டும் என்பது அவரது சிறுபிராயத்து கனவு. ஆனால் அவர் அமர்ந்து ஓட்டும் வாகனம் வாகன சந்தையில் வாய்ப்பில்லை என்பதை விரைவில் உணர்ந்தார். ஏனெனில் அவர் திடீரென அதீதமாய் வளர ஆரம்பித்தார்.

சுலைமானை ஆராய்ந்த மருத்துவர்கள் இது மரபு தொடர்பான கோளாறு என்றும், மூளை அறுவை சிகிச்சை செய்தால் பலன் கிடைக்க வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தார்கள். சுலைமானிடம் அந்தளவுக்கு வசதி இல்லையென்ற போதும் தனது உயரத்தை எளிதாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். ‘அல்லா என்னை இப்படி இருக்குமாறு படைத்திருக்கிறார். அதனை நான் அவ்வாறே ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சகஜமானார்.

உள்ளூருக்கு திரும்பிய அவர் செல்போன் தொடர்பான சிறிய கடை வைத்து வயிற்றுப் பாட்டினை சமாளித்து வருகிறார். 29 வயதாகும் சுலைமானின் உயரமே அவருக்கு விளம்பரம் என்பதால், இதர கடைகளை தவிர்த்துவிட்டு சுலைமான் கடையில் கூட்டம் குவிகிறது. அங்கத்திய மக்கள் செல்லமாக அவரை ’அவுச்சி’ என்றே அழைக்கின்றனர். பிபிசி செய்தி நிறுவனம் சுலைமானை கண்டு சொல்லும் வரை வெளியுலகுக்கு அவர் அறியப்படாதவராக இருந்தார். இனிமேல்தான் உலக சாதனை அங்கீகாரங்கள் அவுச்சியின் கதவைத் தட்ட இருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in