`ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறோம்; ஜூலை 4-க்குள் விண்ணப்பிக்கலாம்'- வேதாந்தா நிறுவனம் திடீர் அறிவிப்பு

`ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறோம்; ஜூலை 4-க்குள் விண்ணப்பிக்கலாம்'- வேதாந்தா நிறுவனம் திடீர் அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு எனவும், அதை வாங்க விருப்பம் இருப்பவர்கள் வரும் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு முதலே இயங்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட் பின்னணி

லண்டனில் செயல்பட்டுவரும் வேதாந்தா ரொசோர்சஸ் நிறுவனத்தலைவர் அனில் அகர்வாலுக்கு சொந்தமானதே ஸ்டெர்லைட். இந்த ஆலைக்கு குஜராத், கோவாவில் அனுமதி மறுத்ததால் மகாராஷ்டிராவுக்கு சென்றது. 300 கோடிக்கு அங்கு பணிகள் நடந்த நிலையில், மக்களின் எதிர்ப்பால் அங்கும் கைவிடப்பட்டது. பல மாநிலங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு, கடைசியாகத்தான் தமிழகத்தின், தூத்துக்குடிக்கு வந்தது ஸ்டெர்லைட். 1994-ல் அதிமுக ஆட்சியில் அடித்தளம் அமைக்கப்பட்டது. 1996-ல் திமுக ஆட்சியில் செயல்படத் தொடங்கியது.

வேதாந்தா ரொசோர்சஸ்க்கு உலகின் பலநாடுகளிலும் தாமிரத்தாதுவை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து வரும் தாமிரதாதுவை உருக்கி தாமிர காத்தோடு, கம்பிகளாக மாற்றுவதே பிரதானம். அப்படி மாற்றுகையில் தங்கம், சல்பியூரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலம் ஆகிய உபபொருள்களும் கிடைக்கும். 1996-ல் முதன்முதலாக தூத்துக்குடி துறைமுகம் வழியே, ஆலைத் தேவைக்கு தாதுப்பொருள்கள் வந்தது. ஸ்டெர்லைட்டால் மீன்வளம் பாதிக்கப்படுமென அப்போதே, படகுகளின் மூலம் கடல்வழியே துறைமுக முற்றுகைப் போராட்டம் நடத்தினர் மீனவர்கள். அன்று தொடங்கிய முதல்போராட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டால் 13 பேர் உயிர் இழந்தது வரை தொடர்ந்தது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின்பு கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஆலை மூடப்பட்டது. 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தமிழகத்தை மட்டுமல்ல, தேசத்தையே உலுக்கியது.

துரத்திய அபாயங்கள்

1997 ஜூலை 5-ம் தேதியை அத்தனை எளிதில் கடந்து செல்ல இயலாது. ஆலையிலிருந்து நச்சுப்புகை வெளியேறி, 150க்கும் அதிகமானோர் மயங்கினர். சில கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவும் நிகழ்ந்ததாக சொல்கின்றனர். அதிகாரிகள் ஆய்வுசெய்து ஆலையை மூடினார்கள். 38 நாளில் மீண்டும் திறக்கப்பட்டது. அதற்கு சிலவாரங்களுக்கு பின்பு செம்புகலவை உலைவெடித்து இருதொழிலாளர்கள் பலியானார்கள். மீண்டும் சம்பிரதாயமூடல், அதன்பின் திறப்பு. 1999-ல் நச்சுப்புகை வெளியேறியதில் அருகிலிருந்த அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்கள் மயங்கி விழுந்தனர். இப்படி இத்தனை சம்பவங்களில் இருந்தும் எளிதாக மீண்டுவந்து, மீண்டும் திறந்த ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டிற்கு பின்பு நீண்டகாலமாக பூட்டியே கிடக்கிறது.

கரோனா உச்சத்தில் இருந்தநேரத்தில் ஆக்சிஜன் தேவைக்காக மட்டும் இந்த ஆலை மூன்று மாதங்களுக்கு நீதிமன்ற வழிகாட்டுதலோடு திறக்கப்பட்டது. பூட்டிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இப்போது விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது வேதாந்தா நிறுவனம். ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விரும்புபவர்கள் வரும் ஜூலை 4-ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம் எனவும் வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கக்கேட்டு வேதாந்தா நிறுவனம் செய்திருந்த மனுவும் பரிசீலிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த அதிரடி முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது. ஒருபக்கம் ஆலைக்கு எதிராக தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் நடந்தாலும், தூத்துக்குடி மாநகர வளர்ச்சித் திட்டங்களிலும் தன் நிறுவனத்தின் மூலம் வேதாந்தா பங்களிப்பு செய்துவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in