‘ஸ்டெல்ஆப்ஸ்’ - பால் பண்ணை செழிக்க ஒரு செயலி!

‘ஸ்டெல்ஆப்ஸ்’ - பால் பண்ணை செழிக்க ஒரு செயலி!

கைகளில் நேரத்தைப் பார்க்க அணியும் கடிகாரத்திலிருந்து உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பை அறியும் வெப்பமானி மருத்துவ சாதனம், நடைப் பயிற்சியாளர்களுக்கு எவ்வளவு தொலைவு அல்லது எவ்வளவு தப்படிகள் நடந்தோம் என்பதைக் கணக்கிடும் அடி மீட்டர் சாதனமெல்லாம் வந்துவிட்டன. இவற்றை அப்படியே கையிலும் காலிலும் அணிந்துகொண்டு இயக்கிவிட்டு பிறகு பணி முடிந்ததும் எடுத்துப்பார்த்தால் நமக்குத் தேவைப்படும் தகவல்கள் தெரிந்துவிடும். இந்தச் சந்தை இப்போது உலக அளவில் வேகமாகப் பரவிவிட்டது.

அதுமட்டுமல்ல ஹாலிவுட் தாரகைகள், பாப் பாடகிகள் அணியும் கடிகாரங்களுக்கு அவர்களுடைய ரசிகர்களிடையே மோகம் அதிகரித்து அவை சந்தையில் வேகமாக விற்பனையாகின்றன. இந்தச் சந்தையை பெங்களூருவைச் சேர்ந்த ‘ஸ்டெல்ஆப்ஸ்’ (Stellapps) என்ற நிறுவனம் பால்வளப் பெருக்கத்துக்குப் பயன்படுத்துகிறது. வியப்பாக இருக்கிறதா?

இந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரஞ்சித் முகுந்தன் நல்லதொரு திட்டம் வைத்திருக்கிறார். கறவை மாட்டின் கால்களில் இந்தச் செயலியை அணிவித்துவிட்டால் ஒரு நாளில் எத்தனை அடிகளுக்கு அந்தப் பசு நடந்தது, எவ்வளவே நேரம் நடக்காமல் ஒரே இடத்தில் நின்றது என்பதிலிருந்து அதன் உடல் வெப்பநிலை உள்ளிட்டவற்றை இந்தச் செயலி பதிவுசெய்து, அத்துடன் இணைக்கப்பட்ட கணினிக்குத் தெரிவித்துவிடும்.

அந்தக் கணினியைக் கண்காணிக்கும் நிறுவனத் தலைமையகம், கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் அந்தக் கறவை மாடு குறித்து ஆலோசனை நடத்தி அதற்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, அல்லது சினைக்குத் தயாராக இருந்தால் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள், உடல் நலம் சரியில்லையென்றால் அதைக் களைய சிகிச்சை என்று மேற்கொள்வார்கள். பிறகு கறந்த பாலும் அறிவியல் கூடத்தில் ஆராயப்படும். அதில் ஊட்டச்சத்துகள் போதுமா, சேர்க்கப்பட வேண்டுமா, கறவை மாட்டுக்குத் தரப்பட வேண்டியவை என்ன என்றெல்லாம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் கறவை மாடுகளும் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழும். அவை தரும் பாலும் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கும். இது இந்திய பால்பண்ணைத் தொழிலை மேலும் மேம்படுத்த உதவும்.

இத்தொழில்நுட்பம் 2011 முதல் கையாளப்படுகிறது. இந்தியாவின் 36,000 கிராமங்களில் 30 லட்சம் கறவை மாட்டு உரிமையாளர்களால் இந்தச் செயலி பயன்படுத்தப்படுகிறது. அன்றாடம் 135 லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது. கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம், புளூம் வெஞ்சர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் டச்சு (ஹாலந்து) நாட்டைச் சேர்ந்த நூட்ரெகோ நிறுவனமும் இதனுடன் இணைந்து சந்தையில் 180 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடாகத் திரட்டியுள்ளன. இந்த நிறுவனத்துடன் இணைந்துள்ள பால் சேகரிப்பு மையங்களில், பாலைக் கறந்து அளித்தவுடன் அந்தப் பாலின் தன்மை, சுவை, ஊட்டச்சத்து ஆகியவற்றை அளவிட்டு மாட்டு உரிமையாளர்களுக்குத் தெரிவித்துவிடுகின்றனர். பிறகு கொள்முதல் செய்யும் பாலின் அளவு, தரத்துக்கேற்ப அவரவர் வங்கிக் கணக்குக்கே பணத்தைச் செலுத்திவிடுகின்றனர்.

பாலை 40 லிட்டர் கொள்ளளவுள்ள சுகாதாரமான கேன்களில் சேகரித்து குளிரூட்டும் மையங்களுக்கு அனுப்புகின்றனர். அங்கு பாலைப் பதப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது அதிலிருந்து மாவு தயாரிக்கின்றனர், தேவைக்கேற்ப பாலாடைக் கட்டியாகவும் தயிராகவும் மாற்றிக்கொள்கின்றனர். மாட்டையும் பாலையும் தொடர்ந்து கண்காணிக்கவும் உரிய தர மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தச் செயலி கை கொடுக்கிறது.

2021-ல் 19.9 கோடி மெட்ரிக் டன் பால் தயாரானது. 1970-கள் வரையிலும் கூட நாம் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறவில்லை. அமெரிக்காவிலிருந்து பால் பவுடர் வாங்கித்தான் பள்ளிக்கூடங்களில் மதிய உணவின்போது அளித்து வந்தோம். வெண்மைப் புரட்சிக்குப் பிறகு பால் உற்பத்தி அதிகமானது. குளிரூட்டப்பட்ட நிலையங்களில் பாலைச் சேமித்து வைப்பது அதிகமாகிவிட்டதால், இப்போது 24 மணி நேரமும் பால் கிடைக்கிறது. வீடுகளிலும் இப்போது ஃபிரிட்ஜில் பால் பாக்கெட் வாங்கி பத்திரப்படுத்துகிறார்கள்.

ஏனைய உணவுப் பொருட்களைவிட பால் மலிவானது. அதை காபி, தேநீர் போன்ற பானங்களிலும் கலந்து சாப்பிடுகிறோம். பால் தயாரிப்பில் ஈடுபடும் கிராமப்புற குடும்பங்கள் வறுமையிலிருந்து மீளவும் இந்த பால் வளத் திட்டங்கள் கைகொடுக்கின்றன. ஆனாலும், இந்தியாவில் ஒரு சில மாநிலங்களைத் தவிர இந்தப் பால் உற்பத்தி ஒரு தொழில் நிறுவனமாக வளரவில்லை. குஜராத்தின் அமுல், தமிழ்நாட்டில் ஆவின் போல ஆங்காங்கே பெரிய பால் உற்பத்தி நிறுவனங்கள் கூட்டுறவுத் துறை, மாநில அரசு, தனியார் துறை ஆகியவற்றில் இருந்தாலும் இதை மேலும் விரிவுபடுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் சொந்தமாகக் கறவை மாடு வைத்திருப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு மாடுகளைத்தான் வளர்க்கின்றனர். இந்தியாவில் உள்ள கறவை மாடுகளில் 80 சதவீதம் இப்படிப்பட்டவர்களால்தான் வளர்க்கப்படுகிறது. பெரிய பண்ணைகள் குறைவு. இதனால் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது.

2019 நிலவரப்படி, இந்தியாவில் ஒரு பசு, நாளொன்றுக்கு சராசரியாக அதிகபட்சம் 5 லிட்டர்தான் கறக்கிறது. அமெரிக்காவில் இது 30 லிட்டருக்கும் அதிகம். எனவே, இதில் புதிய தொழில்நுட்பங்களையும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பையும் புகுத்தி, மேலும் பல மடங்கு வருமானம் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பெருக்கலாம் என்கிறார் ரஞ்சித் முகுந்தன்.

பால் பண்ணை உரிமையாளர்களின் வயிற்றில் இந்தச் செயலி பால் வார்க்குமா, பார்க்கலாம்!

Related Stories

No stories found.