
புழல் சிறைக்கு வந்த கைதியிடம் பறிமுதல் செய்த போதைப் பொருட்களை திருடி மறைத்து வைத்த காவலர்களுக்கு உதவிய சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.கே.பி நகரில் கொலைமுயற்சி உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அபினேஷ்(24) என்பவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரை எம்.கே.பி நகர் காவல் நிலைய காவலர்களான முனிராஜ் மற்றும் தேவராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் பின் நீதிமன்ற காவலில் அடைக்க அன்றிரவு இரவு 12 மணிக்கு புழல் சிறைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது புழல் சிறை வார்டன்கள் அருண்ராஜ் மற்றும் காவலர் காமராசு ஆகியோர் கைதி அபினேஷை சோதனை செய்தனர். அப்போது, அவரது பேண்ட்டில் மறைத்து வைத்திருந்த 2 கிராம் அபின் மற்றும் 1கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சிக்கின.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை டேபிள் மேல் வைத்து விட்டு, கைதி அபினேஷிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.. அப்போது திடீரென டேபிள் மேல் வைத்திருந்த போதைப்பொருட்கள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த சிறை வார்டன்கள் உடனே எம்.கே பி நகர் போலீஸாரிடம் இது குறித்து கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு வார்டன் குணசேகரன் எம்.கே.பி நகர் போலீஸாருக்கு ஆதரவாக பேசி இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்து கொள்ளலாம் என சமரசம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை ஒத்துக்கொள்ளாத வார்டன் அருண்குமார், காமராசு உடனே இந்த தகவலை சிறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை சிறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை எம்.கே.பி நகர் காவலர்கள் எடுத்து மறைத்து வைத்தது பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.பி நகர் காவலர்கள் முனிராஜ், தேவராஜ் மற்றும் சிறை வார்டன் குணசேகரன் ஆகியோரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக எம்கேபி நகர் காவலர்கள் கைதி அபினேஷிடம் லஞ்சம் பெற்று போதைப் பொருட்களை எடுத்து செல்ல அனுமதித்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இரவு 12மணிக்கு கைதியை சிறையில் அடைக்க காவலர்கள் அழைத்து வந்தது எப்படி என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து எம்.கே.பி நகர் காவலர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சிறை வார்டன் குணசேகரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் எம்.கே.பி நகர் காவலர் இருவரிடம் உயர் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் காவலர் முனிராஜ், தேவராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.