பட்டாபிராம் ரயில் நிலையத்தில் கிடந்த ஐம்பொன் சிலைகள்: 8 சவரன் நகையுடன் கொள்ளையர்கள் ஓட்டம்

பட்டாபிராம் ரயில் நிலையத்தில் கிடந்த ஐம்பொன் சிலைகள்: 8 சவரன் நகையுடன் கொள்ளையர்கள் ஓட்டம்

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையால் ஐம்பொன் சிலைகளை பட்டாபிராம் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு, 8 சவரன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை அடுத்த பட்டாபிராம் முல்லை நகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று இரவு பூச்சாரி சக்தி மாரியப்பன் பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை கோயில் கதவு திறந்து இருந்ததை பார்த்த ஊர்மக்கள் உடனே கோயில் பூசாரி மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாரியப்பன் கோயிலுக்கு வந்து பாரத்தபோது கோயிலில் இருந்த முருகன், வள்ளி, தெய்வானை, அம்மன் சிலை என 4 ஐம்பொன் சிலைகளும், அம்மன் கழுத்தில் அணிவித்திருந்த 8 சவரன் தங்க நகைகள் திருட போனதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அம்மன் கோயில் அருகே உள்ள ஸ்ரீராகவேந்திரா ஆலயத்தில் இருந்து 3 ஐம்பொன் சிலைகளையும் கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது. உடனே பட்டாபிராம் போலீஸார் சுற்றுவட்டார காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீஸார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் ரோந்து வருவதை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே சாக்குபையை போட்டுவிட்டு 8 சவரன் தங்க நகையுடன் தப்பி சென்றனர்.

ரயில் நிலையம் அருகே பையில் சாமி சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்து பட்டாபிராம் போலீஸார் அங்கு விரைந்து சென்று சாக்கு பையில் இருந்த 7 ஐம்பொன் சிலைகளை மீட்டனர். மீட்கப்பட்ட சிலைகள் முத்துமாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீராகவேந்திரா ஆலயத்தில் காணாமல் போன சிலைகள் என தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஐம்பொன் சிலைகளை ரோட்டில் போட்டுவிட்டு 8 சவரன் நகையுடன் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in