அந்தமானில் சுற்றுலா: புதுச்சேரியில் தயாராகும் அதிநவீன சொகுசு படகுகள்

அந்தமானில் சுற்றுலா: புதுச்சேரியில் தயாராகும்  அதிநவீன சொகுசு படகுகள்

அந்தமானில் சுற்றுலா பயணிகள் பயணிக்க,  அதிநவீன வசதிகளைக் கொண்ட  மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு படகுகள் புதுச்சேரியில் தயார் செய்யப்பட்டுள்ளன. 

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில், இத்தாலி நாட்டை தலைமையிடமாக கொண்ட 'பி.என்.டி., மைரன் கிராப்ட்' என்ற சொகுசு படகு தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு அந்தமானில்  உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் ஒன்று அதிநவீன வசதிகளுடன் கூடிய  சொகுசு படகுகளை தயாரிக்க ஒப்பந்தம் வழங்கியிருந்தது. 

அதன் பேரில் இந்நிறுவனம், பயணிகள் பயணிக்கும் இரு சொகுசு படகுகளை தயாரித்துள்ளது. பைபரில் புதிய தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி, 55 அடி நீளம், 20 அடி அகலம், 23 அடி உயரத்தில் இந்த  படகுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதில், 20 பயணிகள்  ‘ஏசி’ அறையிலும், 60 பயணிகள் திறந்தவெளி இருக்கையிலுமாக, ஆக மொத்தம் ஒரு படகில் 80 பயணிகள்  பயணிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு படகும் தலா  3 கோடி ரூபாய் மதிப்பிலானது.

இந்த படகில் ரேடார், தகவல் தொடர்பு கருவிகள், கழிப்பறை வசதிகள் ஆகியவை  உள்ளன. பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில்  இரு சொகுசு படகுகளும், பொங்கல் பண்டிகைக்கு பின் வெள்ளோட்டம் விடப்பட்டு, கடல் மார்க்கமாக சென்னை கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து பெரிய கப்பலில், அந்தமான் கொண்டு செல்லப் படுகிறது.

படகுகளை  தயாரித்த நிறுவனத்தின்  இயக்குனர் பிரதாப்,  ”'வேக்கம் இன்பியூஷன்’ என்ற முறையை பயன்படுத்தி எடை குறைவான  வகையில் இதனை தயாரித்துள்ளோம். அதனால்  மணிக்கு, 18 நாட்டிக்கல் மைல் தூரம் இதனால்  பயணிக்க முடியும்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in