`விரைந்து நடவடிக்கை எடுத்துவிட்டீர்கள்'- புதுக்கோட்டை ஆட்சியருக்கு ஆதி திராவிடர் ஆணையம் பாராட்டு

`விரைந்து நடவடிக்கை எடுத்துவிட்டீர்கள்'- புதுக்கோட்டை ஆட்சியருக்கு ஆதி திராவிடர் ஆணையம் பாராட்டு

தீண்டாமை விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுத்தமைக்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் அருகே வேங்கைவயலில் 50-க்கும் மேற்பட்ட  பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தீண்டாமை கொடுமை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் குடிக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக் கழிவுகள் கலந்து கொடுமை செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் அங்குள்ள அய்யனார் கோயிலில் இந்த மக்கள் வழிபடவும் அவர்கள் தடை விதித்திருந்தனர். இந்த தகவல் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேற்று முன்தினம்  வேங்கைவயலுக்கு நேரில் சென்றனர். அப்போது, இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறை இருப்பதாகவும், அங்குள்ள அய்யனார் கோயிலுக்கு தங்களை அனுமதிப்பதில்லை எனவும் வேங்கைவயல் மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் வேங்கைவயல் மக்களை உடனடியாக  அய்யனார் கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபடச் செய்தனர். மேலும், இப்பகுதியினரை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகத்தினரிடம்  ஆட்சியர் அறிவுறுத்தினார். அப்போது, இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள் (35) என்பவர் வேங்கைவயல் மக்களை அய்யனார் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என சாமியாடிக் கொண்டு கூறியுள்ளார்.

இதையடுத்து, இரட்டைக் குவளை முறையை கடைபிடித்து வந்த இறையூரைச் சேர்ந்த மூக்கையா (57), வேங்கைவயல் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த சிங்கம்மாள் ஆகியோர் மீது வெள்ளனூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக தகவல் தெரிந்த மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளை களைய விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரையும்,  காவல் கண்காணிப்பாளரையும் மாநில ஆணையம் பாராட்டுகிறது. இந்த சம்பவங்களில் எடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கையும்,  மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆணையம் வெகுவாக  பாராட்டுகிறது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து தானாகவே முன்வந்து விசாரணை செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது' என்று மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in