`தனித்தனியாகச் செயல்படாமல், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’- முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

`தனித்தனியாகச் செயல்படாமல், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’- முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

‘வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன்  காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும்  மாவட்ட ஆட்சியர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒரு பிரச்சினையில் தீவிரத்தை நாம் உணர்ந்தால், நாம் அதைப் பாதி வென்றதாகப் பொருள். ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள நாம் ஆதங்கப்படுவதைவிட ஆயத்தப்படுத்திக் கொண்டால் அந்த பிரச்சினையை முழுவதுமாக வென்றுவிட்டதாக அமைந்துவிடும். எந்தவித பேரிடரையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை அறிந்து உங்கள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிகக் கனமழையும், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன் அறிகுறியாக நேற்று முதலே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மிகக் கனமழை, சூறாவளிக் காற்று உள்ளிட்டவற்றை எதிர்கொள் நாம் தயாராக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பெய்த மழை நமக்கெல்லாம் பெரும் சவாலாக அமைந்துவிட்டது. இதேபோல் மற்ற சில மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மீண்டும் அதேபோன்ற நிலை தமிழகத்தில் ஏற்படக் கூடாது என முடிவெடுத்து அதற்காகக் குழு அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறோம். வடகிழக்கு பருவமழையால் பாதிக்கக் கூடிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் முடிந்திருக்கும் என்று நம்புகிறேன். இம்முறையும் மழைநீர் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு.

இதனை  உங்களது சார்நிலை அலுவலர்களுக்கு உணர்த்தி செயல்பட வைக்க வேண்டும். மக்களுக்கு நேரடி சேவை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கப் பல்துறை கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண மையங்களில் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாதுகாப்பு என அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். பாதிப்புக்குள்ளாக்கும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பழுதடைந்த பலவீனமாகச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும். கடற்கரையோர பகுதி மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் வருவாய்த் துறை, தீயணைப்புத்துறை, பொதுப் பணித்துறை, காவல்துறை என பல்வேறு துறை அலுவலர்களும் தனித்தனியாக இயங்காமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in