
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை திருத்தேர் உற்சவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ரங்கா ரங்கா, கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கங்கள் விண்ணதிர ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
108 வைணவத்தலங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான தை தேர்த்திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் ஶ்ரீநம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உற்சவத்தின் ஒரு பகுதியாக கடந்த 29-ம் தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்தார். நேற்று மாலை தங்கக்குதிரை வாகனத்தில் உத்திர வீதிகளில் உலா வந்து, தைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் ஶ்ரீநம்பெருமாள் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு தைத்தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். காலை 4.30 மணி முதல் காலை 5.15 மணி வரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நடைபெற்றது.
அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஶ்ரீநம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளினார். பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. தேரில் எழுந்தருளிய ஶ்ரீநம் பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா, கோவிந்தா கோவிந்தா என்று உரக்க அழைத்துச் வழிபட்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் தெற்கு உத்திர வீதியிலிருந்து புறப்பட்டு மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி மற்றும் கிழக்கு உத்திர வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலைக்கு வந்தது.
தேரின் முன்பாக பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றியும் வழிபட்டனர். நாளை சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. தைத்தேர் திருவிழாவின் நிறைவு நாளான வருகிற 5-ம் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வந்து பொதுமக்களுக்கு காட்சியளிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.