
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவமான இன்று ஶ்ரீநம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் காட்சியளித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த 22-ம் தேதி தொடங்கி பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் திருநாளான இன்று ஶ்ரீநம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, ஸ்ரீரங்க விமான பதக்கம் (பெரிய பெருமாள், ஶ்ரீநம்பெருமாள் உபயநாச்சிமார்கள், பரவாசுதேவர், விபீஷணன், துவாரபாலகர்கள் என 8 திருமேனி பதிக்கப் பெற்றது) அடுக்கு பதக்கங்கள், சிகப்புக்கல் அபயஹஸ்தத்துடன், பச்சைவர்ண வஸ்திரம், 6 வட பெரிய முத்து சரம் சாற்றி பின் சேவையாக அண்டபேரண்ட பக்க்ஷிபதக்கம், புஜ கீர்த்தி ஆகியவற்றை கைகளில் சாற்றி எழுந்தருளினார்.
இந்த தோற்றத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது.