இரவில் கடலில் இறக்கிவிட்டு சென்றனர்.. மயக்க நிலையில் தீவிர சிகிச்சை: வயதான இலங்கைத் தம்பதியின் கண்ணீர் கதை

இரவில் கடலில் இறக்கிவிட்டு சென்றனர்.. மயக்க நிலையில் தீவிர சிகிச்சை: வயதான இலங்கைத் தம்பதியின் கண்ணீர் கதை

இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்த வயதான தம்பதிகளை கடலில் பாதி வழியில் விட்டு சென்றதால், மயங்கி கரை ஒதுங்கிய இருவரையும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் பகுதியில் உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் நேற்று மயங்கிய நிலையில் கிடந்தனர். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த அவர்களை, கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் மீட்டனர். அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வர இயலாததால் இருவரையும் கடலோர பாதுகாப்பு காவல்துறைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் படகில் ஏற்றிக்கொண்டு மண்டபம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்ந்து, இருவருக்கும் நினைவு திரும்பிய நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இலங்கை மன்னார் மாவட்டம் பிருங்கன்பட்டியைச் சேர்ந்த சிவன் (82), அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் கூலி வேலை பார்த்து வந்த அவர்கள், அங்கு ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் வாழ முடியாத நிலையில் தமிழகத்திற்கு வந்துள்ளனர். மேலும், இருவரையும் படகில் அழைத்து வந்தவர்கள் இரவு நேரத்தில் ஆழம் குறைந்த தண்ணீரின் நடுவே இறக்கி விட்டுச் சென்றதால், வழி தெரியாமல் நடந்து வந்து மணல் திட்டு பகுதிக்கு வந்திருக்கின்றனர். பின்பு வயது முதிர்வு காரணமாக மேலும் செல்ல முடியாமல் மயங்கி விட்டனர். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், வயதான தம்பதி இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in