`இலங்கையின் நிலை கேரளத்திற்கும் வரும்'- எச்சரிக்கும் ரமேஷ் சென்னிதலா

`இலங்கையின் நிலை கேரளத்திற்கும் வரும்'- எச்சரிக்கும் ரமேஷ் சென்னிதலா

காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான 529 கிலோ மீட்டர் தூரத்தினை நான்கு மணிநேரத்தில் கடக்கும்வகையில் ‘கே ரயில் திட்டம்’ ஒன்றை வடிவமைத்துள்ளது கேரள அரசு. இதற்கு மத்திய அரசின் அனுமதியும் பெற்று பணி துவங்கியிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கானோரின் வீடு, விவசாய நிலம் உள்ளிட்டவை பறிபோகும் வாய்ப்பு இருப்பதாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், பாஜக கட்சிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.

இப்படியான சூழலில் கே ரயில் திட்டம் ஒட்டுமொத்த கேரளத்தையுமே சிதைத்துவிடும் அபாயம் இருப்பதாகவும், இதனால் இலங்கையைப்போல் கேரளத்திலும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கிறார் முன்னாள் கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா.

இதுகுறித்து காமதேனுக்கு ரமேஷ் சென்னிதலா அளித்த பேட்டியில், “இடதுசாரி அரசின் திட்டமிடப்படாத இந்த செயலால் மொத்தக் கேரள மக்களும் தங்கள் வீடு, நிலம் ஆகியவை பறிபோய்விடும் என அச்சத்தில் உள்ளனர். தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தை பொருட்படுத்தாமல் இடதுசாரிகள் தங்கள் பாக்கெட்களை நிரப்புவதில் மட்டுமே குறியாக உள்ளனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மார்க்சிஸ்ட் உறுதியாக இருக்கிறது. இது இலங்கையின் பொருளாதார சூழலை கேரளத்திற்கும் உருவாக்கிவிடும்.

இந்தத் திட்டத்திற்காக வயல்வெளி, மலை, கால்வாய், ஏரி ஆகியவற்றை இஷ்டத்திற்கு அதன் போக்கினை மாற்றியமைக்கவும், உடைக்கவும் செய்வார்கள். இதனால் கேரளம் இயற்கை பேரிடர் அபாயம் உள்ள பகுதியாகவும் மாறும். இதை நீண்ட ஆய்வுக்குப் பின்பே நான் கூறுகிறேன். மாநிலத்தின் ஒருமுனையில் இருந்து மறுமுனைவரை கேரள அரசு எட்டு மீட்டர் உயரமும், முப்பது மீட்டர் அகலமும் கொண்ட ராட்சச சுவரை கே ரயில் பாதை என்னும் பெயரில் கட்டமுனைகின்றது. இருபுறமும் கான்கிரீட் சுவர்கள் கட்டி, மண் நிரப்பி நிலப்பரப்பை உயர்த்தி ரயில்பாதை கட்டப்படும். 292 கிலோ மீட்டருக்கு இப்படி சுவர்களை எழுப்புவதாக திட்ட அறிக்கை கூறுகிறது.

இதேபோல் 101 கிலோ மீட்டருக்கு சிறுகுன்றுகளை வெட்டி புதிய வழித்தடம் உருவாக்கி கே ரயில் பாதை உருவாக்க உள்ளார்கள். அங்கும் அந்த கான்கிரீட் சுவர் இருக்கும். 11 கிலோ மீட்டருக்கு மலைகளை குடையப் போகிறார்கள். ஒட்டுமொத்த கேரளத்தின் வளத்தையும் இந்த கே ரயில் திட்டம் காவுவாங்கும். கூடவே இயற்கை கட்டமைப்புகளையும், நீர்பிடிப்புப் பகுதிகளையும் மிதமிஞ்சி இடையூறு செய்வதால் நிலச்சரிவு சம்பவங்களும் இனி அதிகரிக்கும்.

சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின்படி, இப்போது அரசு முன்மொழிந்திருக்கும் கே ரயில் திட்டப் பாதையில் 164 நீரியல் உணர்ச்சிமிகுந்த பகுதிகள் என அடையாளபடுத்தப்பட்ட நீராதாரங்கள் வருகிறது. ஆனால் அவற்றை அரசு சட்டையே செய்யவில்லை. 529 கிலோமீட்டர் தூரத்திற்கு இப்படி ஒருதிட்டத்தை உருவாக்க எங்கே இருந்து பாறை, மண் ஆகியவை கிடைக்கும்? அதன் பின்னாலேயே இயற்கை அழிப்பும் ஒளிந்திருக்கிறது. இத்திட்டத்திற்கு 63,941 கோடி செலவாகும் என டி.பி.ஆர் திட்ட அறிக்கை கூறுகிறது. அதேநேரத்தில் நிதி ஆயோக்கோ 1.24 லட்சம் கோடி, இந்தத்திட்டம் முடியும்போது செலவாகி இருக்கும் என சொல்கிறது. இதிலேயே முரண் இருக்கிறது. இத்திட்டத்திற்கு பத்து சதவீதம் மத்திய அரசு வழங்குகிறது. 30 சதவீத நிதியை மாநில அரசும், 7 சதவீத நிதி தனியார் பங்களிப்புடனும், மீதமுள்ள 53 சதவீத நிதி வெளிநாடு, உள்நாட்டு கடனில் வரும். இந்தத் திட்டத்திற்கு வெளிநாட்டுக் கடனுக்கும் மாநில அரசே உத்தரவாதம் அளிக்கவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கேரளத்திற்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே கடந்த ஆறாண்டுகால ஆட்சியில் 1.5 லட்சம் கோடியாக இருந்த கேரளத்தின் கடன் 3.10 கோடியாக இருமடங்காக உயர்ந்துள்ளது. இதேபோன்று தன்மைகொண்ட மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். ஆனால் இங்கே கே ரயில் திட்டத்தைக் கொண்டுவருகிறார்கள். இதுமக்கள் மத்தியில் அம்பலமாகிவிட்டது. மேற்குவங்கத்தைப் போலவே கேரளத்திலும் கம்யூனிஸ்ட்கள் அகல மக்களே விரும்பும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in