இவங்களையும் அகதிகளா ஏத்துக்கிடணும்!

மீண்டும் அகதிகளாக வரத் தொடங்கி இருக்கும் இலங்கை தமிழர்களுக்காக ஒரு கோரிக்கை
அகதிகளாக வந்த  இலங்கை தமிழர்கள்...
அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள்...

இலங்கை போரின்போது அங்கிருந்து தப்பி தாயகம் வந்த தமிழர்களை எல்லாம் அகதிகளாக ஏற்று அடைக்கலம் தந்தது தமிழக அரசு. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் இப்போதும் தமிழர்கள் அங்கிருந்து அகதிகளாக தாயகம் திரும்பும் அவலம் தொடர்கிறது. ஆனால், இவர்களை எல்லாம் அகதிகளாக அங்கீகரிக்க அரசு மறுத்து வருவதால் இங்கேயும் அவர்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய போது ஆயிரக் கணக்கான தமிழர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தனர். அப்படி வந்தவர்களுக்காக தமிழகத்தில் அகதி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட 108 முகாம்கள் இன்னமும் இயங்கி வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்த முகாம்களில் தற்போது சுமார் 70 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். முகாம்களுக்கு வெளியே சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.

முகாம்களில் தங்கியுள்ள அகதிகளுக்கு அரசு மானிய விலையில் குடிமைப் பொருள்களை வழங்கி வருகிறது. அத்துடன் ஆண்களுக்கு ரூ.1500, குடும்பத் தலைவிக்கு ரூ.1000, 12 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு ரூ.750, குழந்தைகளுக்கு ரூ. 500 என மாதாந்திர உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டாலும் சட்டப்படி இவர்கள் அனைவருமே சட்டவிரோத குடியேறிகள்தான். ஏனெனில், இவர்களுக்கு பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணங்களும் இல்லை. ஐ.நா-வின் குடியுரிமை சட்டத்தில் இந்தியா கையொப்பம் இடாததால், இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில், இலங்கை அகதிகளின் வாழ்வாதார மேம்பாடு என்பது இரண்டு வகையாக உள்ளது. ராஜீவ் மரணத்திற்கு முன், பின் என்பது தான் அது. ராஜீவ் மரணத்தால் இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் பலவகையான இன்னலுக்கு ஆளாகும் நிலை இருந்ததால் அவர்களின் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் முறைப்படுத்தப்படவில்லை. குடியுரிமை, வாக்குரிமை இல்லாத இந்த மக்கள் மீது, அதிகாரத்தில் இருப்பவர்களும் பெரிதாக அக்கறைகொள்ளவில்லை.

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் - மண்டபம்
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் - மண்டபம்

இந்நிலையில், 2021-ல் ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த விரும்பினார். அவர்களுக்கு முறையான வாழ்வுரிமை கிடைக்கவும் முயற்சி எடுத்தார். ‘இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறை’ என்பதை ‘இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுத் துறை’ என மாற்றியதுடன் ‘இலங்கை தமிழர் நலன் ஆலோசனைக் குழு’ ஒன்றையும் அமைத்தார். தமிழகத்தில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் கல்வி உரிமை, இருப்பிட தரம், சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க இந்தக் குழுவுக்கு உத்தரவிட்டார் முதல்வர். குடியிருப்புகள் கட்டவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகவும் 317 கோடி ரூபாய் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.

இந்தச் சூழலில் 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போருக்கு பின் தடைபட்டிருந்த இலங்கை அகதிகள் வருகை, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணம். கடந்த 6 மாதத்தில் மட்டும் 75 குடும்பங்களைச் சேர்ந்த 258 பேர் தனுஷ்கோடி வழியாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மண்டபம் முகாம்
மண்டபம் முகாம்

2009-ம் ஆண்டுக்கு பின் இலங்கையில் இருந்து ஆவணங்கள் ஏதும் இன்றி வந்தவர்களை ஊடுருவல் செய்தவர்களாக கருதி அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. இதனால் இவர்கள் அகதிகளுக்கான மறுவாழ்வு முகாம்களுக்கு பதிலாக சிறைகளிலோ, அகதிகள் முகாமில் உள்ள சிறப்பு கண்காணிப்பு முகாமிலோதான் அடைக்கப்பட்டனர். ஆனால், தற்போது வந்துள்ள இந்த 258 பேர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; அவர்கள் அகதிகளாகவும் அங்கீகரிக்கப் படவில்லை.

ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கபட்டுள்ள இவர்களுக்கு மூன்று வேளை உணவு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக வழங்கப்படும் அகதிகளுக்கான சலுகைகள் எதுவும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இது குறித்து நம்மிடம் பேசிய இலங்கை தமிழர் ஏதிலியர் கழக நிர்வாகி ஒருவர், ‘’இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து 40 ஆண்டு காலமாக இந்தியாவில் வசித்து வருகிறோம். இரண்டு தலைமுறையாக வசித்து வரும் எங்களுக்கு இந்திய பிரஜை என்ற சான்று இல்லை. இந்தியாவில் பிறந்தாலும் எங்க குழந்தைகள் இலங்கை பிரஜையாகத்தான் கருதப்படுகின்றன. இலங்கையில் எத்தகைய அரசு வந்தாலும் தமிழர்களுக்கு நிம்மதி கிட்டவில்லை.

கான்ஸ்டண்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டண்டைன் ரவீந்திரன்

முன்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுழைவதற்கு சிங்களருக்கு பயம் இருந்தது. இப்போது அப்படி இல்லை. தமிழர் குடியிருப்புகளில் சிங்களர் குடியேற்றம் செய்வதும், புத்த விஹாரங்கள் அமைப்பதும் தொடர்ந்துட்டுத் தான் இருக்குது. இது போதாதென்று பொருளாதார நிலைமையும் அங்கட சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்ல. இதனால இங்கிருந்து இலங்கைக்கு திரும்பிச் செல்ல நினைச்சிருந்தவங்க கூட அங்கு போக விரும்பல. இந்த சூழல்லதான் எங்கட மக்கள் அவங்களோட வீடு, காணி எல்லாத்தையும் விட்டுட்டு மீண்டும் அங்கிருந்து வெளிக்கிட்டு அகதிகளா இங்க வாராங்க.

அப்படி வர்ற எங்கட மக்கள இன்னும் அரசாங்கம் அகதியாக ஏத்துகிடல. ஏதோ வீட்டுக்கு வந்த விருந்தாளி போல முகாமில தங்க வச்சு மூன்று வேளையும் சாப்பாடு மட்டும் போடுறாங்க. முகாமில் தங்கியிருக்கிற அவங்கள அதிகாரிகளும் முறையா கவனிக்கிறதில்ல. இதனால் சிலர் கள்ளத்தனமாக முகாமை விட்டு வெளியேறி வெளி முகாம்கள்ல இருக்கிற உறவினர்கள் வீட்டுக்கோ, அல்லது மீண்டும் இலங்கைக்கோ போக எத்தனிக்கிறாங்க. இதனால மத்தவங்களுக்கும் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுது. எனவே, அரசாங்கம் இவங்களையும் அகதிகளாக ஏத்துக்கிடணும்’’ என்றார்.

இலங்கை தமிழர்கள் அகதிகளாக ஏற்கப்படுவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன் என திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனிடம் கேட்டதற்கு, ‘’இலங்கையில் இருந்து பொருளாதார நெருக்கடியால் வரும் தமிழர்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு அகதிகளுக்கான உரிமைகள் கொடுக்க வேண்டும் என கோரியும் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது சர்வதேச பிரச்சினை என்பதால் மாநில அரசு முடிவுவெடுக்க முடியாது. இந்த பிரச்சினை தொடர்பாக சட்டத்திற்கு உட்பட்டு பேச்சுவார்த்தை மூலம் ஒன்றிய அரசு எடுக்கும் முடிவை இலங்கை அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மையில், அயல்நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி வருவது என்பது ஊடுருவலை போன்றுதான் பார்க்கப்படும். ஆனாலும், இயலாத சூழலில் இலங்கையில் இருந்து வரும் நம்ம பிள்ளைகளை, தொப்புள்கொடி உறவுகளை தாயுள்ளத்தோடு வரவேற்று அவங்கள விசாரிச்சு அவங்களுக்கு தேவையான உதவிகளை செஞ்சு கொடுக்கிறோம். நமது கோரிக்கையை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அதற்கான சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு எடுக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த விஷயத்தில் சர்வதே சட்டங்களுக்கு உட்பட்டு இந்தியா - இலங்கை இடையே சிறப்பு உரிமைகள் ஏதும் இருந்தால் இரு அரசுகளும் பேசி இது தொடர்பான முடிவினை எடுக்க வேண்டும். ஏற்கெனவே இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து இங்கு தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மக்களவையில், திமுக மக்களைவை குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி பேசியுள்ளார். இருதரப்பு அரசுகளும் இந்த விஷயத்தில் சட்டபூர்வமான மாற்று வழியினை கண்டு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முயற்சிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்’’ என்றார்.

அடுத்த வேலை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் தான் இலங்கை தமிழர்கள் அங்கிருந்து புலம்பெயர்ந்து தாயகத்துக்கு அகதிகளாக வருகிறார்கள். அவர்களை பட்டினி போடாமல் மூன்று வேளையும் அவர்களுக்கு உணவளித்து பாதுகாக்கும் தமிழக அரசின் அரவணைப்பு பாராட்டத்தக்கதுதான். அதேசமயம், எத்தனை நாளைக்கு இப்படியே அவர்களுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருக்க முடியும்... அவர்களும் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும்? இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் அவர்களை அகதிகளாகப் பதிவு செய்து அகதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளையாவது தருவதற்கு தாமதமின்றி முன்வரவேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in