
வேளாங்கண்ணியில் இருந்து பதிவு செய்யப்படாத விசைப்படகில் திருட்டுத்தனமாக வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த 6 இலங்கை அகதிகளை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை அகதிகள் சிலர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருட்டுத்தனமாக இலங்கைக்கு தப்பிச்செல்லப் போவதாக நாகப்பட்டினம் க்யூ பிரிவு குற்றப்புலனாய்வு துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாகப்பட்டினம் கியூ பிரிவு குற்றப் புலனாய்வு துறை காவல் துணைக்கண்காணிப்பாளர் சிவசங்கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திர பூபதி ஆகியோர் தலைமையிலான க்யூ பிரிவு போலீஸார், வேளாங்கண்ணி விடுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் வேளாங்கண்ணி மாதா கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமான அசிசி பிளாக் 1 விடுதி அறை எண் 108 -ல் தங்கி இருந்த தூத்துக்குடி குளத்துவாய்ப்பட்டி முகாமைச் சேர்ந்த கேனுஜன் (34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவர் பள்ளி முகாமைச் சேர்ந்த ஜெனிபர் ராஜ் (23), அதே முகாமை சேர்ந்தவர்கள் 18 வயது சிறுவன், புவனேஸ்வரி (40), செய்யாறு கீழ்ப்புதுப்பாக்கம், வேல்முருகன் தெருவைச் சேர்ந்த துஷ்யந்தன் (36) ஆகியோரை கண்டறிந்தனர்.
அதேபோல வேளாங்கண்ணி எமிரேட்ஸ் விடுதி அறை எண். 203 -ல் தங்கி இருந்த வேலூர் வாலாஜா வட்டம் திருமலைச்சேரி குடிமல்லூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த சதீஸ்வரன் (32) ஆகியோரையும் கண்டறிந்து அனைவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பூம்புகாரைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகை வாங்க ரூ.17 லட்சத்திற்கு பேசி இருப்பதாக தெரியவந்தது.
மேலும் படகிற்கு கொடுப்பதற்காக அவர்கள் வைத்திருந்த பணத்தையும், க்யூ பிரிவு போலீஸார் கைப்பற்றி மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.