நடுக்கடலில் நாகை மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு: இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்

கடல் கொள்ளையர்களால் வெட்டுப்பட்ட மீனவர் முருகன்
கடல் கொள்ளையர்களால் வெட்டுப்பட்ட மீனவர் முருகன்நடுக்கடலில் நாகை மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு: இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதல் நடத்தி அரிவாளால் வெட்டியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் அவர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

நாகப்பட்டினம் அருகே உள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த ஐந்து மீனவர்களும் நேற்று கடலுக்குச் சென்றனர். கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் பரப்பில் இன்று அதிகாலை அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களின் பைபர் படகில் இறங்கி இவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். 

அத்துடன் அவர்கள் அரிவாளால் வெட்டியதில்  முருகனின் இடது கையில் மூன்று விரல்கள்  துண்டானது. மேலும் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மீனவர்களுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.  மீனவர்களைத் தாக்கிய கடற்கொள்ளையர்கள் படகில்  இருந்த ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜிபிஎஸ் கருவி,  வலை,  மீன்கள் உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்துச் சென்றனர். 

படுகாயங்களுடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள் இது குறித்து ஊர்க்காரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து அவர்கள் போலீஸ் மற்றும்  ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சென்று மீனவர்களை  அதில் ஏற்றி நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நாகை மீனவர்களுடைய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in