விசைப்படகுடன் தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!

விசைப்படகுடன் தமிழக மீனவர்களை சிறைபிடித்தது  இலங்கை கடற்படை!

வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  புதுக்கோட்டையைச்  சேர்ந்த தமிழக மீனவர்கள் மூன்று பேரை  எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரதிஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த அருள் (36),  ஐயப்பன் (26), சுந்தரம் ( 30) ஆகிய மூன்று மீனவர்கள்  கோட்டைப்பட்டினம் மீன்பிடித்  துறைமுகத்திலிருந்து நேற்று  காலை  புறப்பட்டு மீன் பிடிப்பதற்கு சென்றிருந்தனர். நேற்று நள்ளிரவில் நடுக்கடலில் நெடுந்தீவிற்கு அருகே இந்திய எல்லைப் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக கூறி அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசைப்படகுடன் காங்கேசன்  துறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  விசாரணைக்கு பின் அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு பிழைப்புக்கு வழி தேடி கடலுக்குச் சென்றவர்களை சிறைக்குள் தள்ளி தீபாவளி கொண்டாட வைத்திருக்கிறது இலங்கை கடற்படை.  தொடரும் மீனவர்களின்  இந்த அவல நிலையை தடுப்பதற்கு ஒரு நிரந்தர தீர்வை  மத்திய அரசு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in