திருச்சி விமான நிலையத்தில் தங்கநகை, செல்போன்கள் பறிமுதல்: வசமாக சிக்கிய பயணி

திருச்சி விமான நிலையத்தில் தங்கநகை, செல்போன்கள் பறிமுதல்: வசமாக சிக்கிய பயணி
Updated on
1 min read

திருச்சி விமான நிலையத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் 15.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், 26.50 லட்சம் மதிப்பிலான  புதிய செல்போன்களும் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி, பெகரின், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கை வழியாக அதிக அளவில் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்களில் சிலர் வளைகுடா நாடுகளில் இருந்து  அதிக அளவில் தங்கத்தைக் கடத்தி வருவதும், அதனைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று இரவு  இலங்கையிலிருந்து வந்த  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர் ( 43) என்ற பயணியின் நடவடிக்கை  சந்தேகப்படும்படி இருந்தது.  அந்த  பயணி வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்திருப்பதை அடுத்து அவரின் மேல் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனையடுத்து  சுங்கத்துறை அதிகாரிகள்  அவரை தனிமைப் படுத்தி உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் அவரது உடைமைகளில் மறைத்து எடுத்து வந்த 190 கிராம்  எடையிலான தங்க சங்கிலி மற்றும் 39 கிராம் எடையிலான  தங்க சங்கிலி, 51 கிராம் அளவிலான 2 காது வளையங்கள் என மொத்தம் ரூ. 15.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும்  அவரது மற்ற  உடமைகளிலிருந்து ரூ. 26. 50 லட்சம் மதிப்பிலான 12 வெளிநாட்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பயணியிடமிருந்து மொத்தம்  ரூ. 41. 65 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in