புழல் சிறையில் தவிக்கும் இலங்கை மீனவர்கள்: விடுதலை செய்ய தமிழக மீனவர் பிரதிநிதிகள் கோரிக்கை

புழல் சிறையில் தவிக்கும் இலங்கை மீனவர்கள்: விடுதலை செய்ய தமிழக மீனவர் பிரதிநிதிகள் கோரிக்கை

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் பணி. சர்ச்சில் தலைமையில் தெற்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார் மற்றும்  பல்வேறு மீனவ அமைப்பினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அவர் வழியாக தமிழக முதல்வருக்கும், இந்திய வெளித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், இரண்டு மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஆறு அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் அவர்களை அவர்களது தாயகம் அனுப்பவும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தெற்கு எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் திருத்தமிழ் தேவனார் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “இலங்கையில் புத்தளம் மாவட்டம் கல்பட்டி கண்டல்குழியா மீனவ கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் ஜார்ஜ் மகன் ரணில் ஷர்மா (31), ஜுட்ராஜ் மகன் சேகன் ஸ்ரீவான்( 24), ஜூடு பெர்னாண்டோ மகன் உத்தாரா கசூன்(27), நிகுளாஸ் ஆனந்தா மகன் சஞ்சீவா(30), அசோகா செபாஸ்டின் மகன் சங்கல்ப ஜீவானந்தா(19), சுரேஷ்குமார் மகன் சுதேஷ் சஞ்சீவா (19) ஆகிய ஆறு மீனவர்களும் நவம்பர் மாதம் இலங்கையில் புத்தளம் மாவட்டம் கல்பட்டி மீனவ கிராமத்திலிருந்து இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்டுப் படகில் மீன்பிடிப்பதற்காக  ஆழ் கடலுக்கு வந்தனர்.

இந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி அதிகாரிகள், இவர்கள் ஆறு மீனவர்களையும் கைது செய்தனர். இம்மீனவர்கள் விசாரணையின் போது இவர்கள் தவறுதலாகத்தான் சிறிய படகிலே மீன்பிடித்துக் கொண்டு இந்திய கடலுக்குள் நுழைந்துள்ளார்கள் எனத் தெரியவந்தது.

இவர்களுக்கு வேறு எந்த உள்நோக்கம் இல்லை என இவர்களை விசாரித்த அதிகாரிகளும் அறிக்கை வழங்கி இருக்கின்றனர். இவர்கள் மீது தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (19/2022), அந்த வழக்கிலும் இந்த மீனவர்கள் வேறு எந்த குற்றச்செயல் உள்நோக்கத்துடன் வரவில்லை மீன்பிடிப்பதில் தான் தவறாக கடலுக்குள் வந்திருக்கின்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆறுபேரும் விசாரணை கைதிகளாக வைக்கப்பட்டு விசாரணைக்குப் பின்பு அவர்களது தாயகம் திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆறு இலங்கை மீனவர்களும் விசாரணையில் வேறு எந்த குற்றமும் புரியவில்லை என்று தெரிந்திருந்தும் சென்ற இரண்டு மாதமாக  ஆறு மீனவர்களையும் புழல் சிறையிலே அடைத்து வைத்துள்ளனர். இவர்களது இரண்டு  சிறிய படகும் தூத்துக்குடியில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.  அப்பாவி மீனவர்களை வேறு ஏதோ குற்றவாளி போன்று சிறையில் அடைத்து வைத்திருப்பதும் அவர்களது படகு சிறை பிடிப்பதும் மீனவ மக்களிடையே மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளன. சிறைபிடிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும் இந்த ஆறு மீனவர்களும் இலங்கையில் தங்கள் குடும்பத்துடன் தொடர்பு கொள்ளவும், தாங்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றோம் என்ற செய்தியை சொல்லவும் இந்நாள் வரை எந்த அனுமதியும் சிறை நிர்வாகம் வழங்கவில்லை.

எனவே, உடனடியாக ஆறு மீனவர்களும் தங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நட்பு நாடாகிய இலங்கையோடு கொண்டிருக்கின்ற நட்புறவை நல்லெண்ணத்துடன் மேலும் மேன்மைப்படுத்த இந்த ஆறு மீனவர்களையும் உடனடியாக விடுவித்து அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் ”என்றார். இதே விஷயத்தை மனுவாகவும் அனுப்பியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in