‘பள்ளிகளை மூட உத்தரவிட்டது இலங்கை அரசு’: கடும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் நடவடிக்கை!

‘பள்ளிகளை மூட உத்தரவிட்டது இலங்கை அரசு’: கடும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் நடவடிக்கை!

வரலாறு காணாத எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு ஜூலை 4-ம் தேதி முதல் ஓரு வார காலம் விடுமுறையை அறிவித்துள்ளது இலங்கை கல்வி அமைச்சகம்.

நிலைமை சீரான பின்னர் அடுத்த விடுமுறை காலத்தில் பள்ளிகளின் பாடத்திட்டம் நடத்தப்படும் என இலங்கை கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜூன் 18-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் ஒரு வாரத்திற்கு மூடுவதாக இலங்கை அரசு அறிவித்தது. இது தொடர்பாக இலங்கை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீடித்த மின்வெட்டு காரணமாக கொழும்பு நகர எல்லையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் பிற மாகாணங்களின் முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகள் அடுத்த ஒரு வாரத்திற்கு மூடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட இலங்கை கல்வி அமைச்சகத்தின் செயலாளர் நிஹால் ரணசிங்க, “பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்தவேண்டும். போக்குவரத்து சிரமங்கள் மாணவர்கள், ஆசிரியர்ககளை பாதிக்காத நிலைமை இருந்தால் உள்ளூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன் வகுப்புகளை நடத்தலாம்.

வார நாட்களில் ஆன்லைன் கற்பித்தலுக்கு வசதியாக காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புக்கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அங்கு பொதுமக்கள் கிளர்ச்சி வெடித்ததை அடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து மே மாதம் நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். மே மாதத்தில் இலங்கை நாட்டில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக இருந்தது. இதனால் உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் கடுமையான பற்றாக்குறையை இலங்கை சந்தித்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in