
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் விளையாட்டு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம். இங்கு கால்பந்து , ஹாக்கி , தடகளம், கூடைப்பந்து, வாலிபால் , நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளுக்கான மைதானங்கள் உள்ளன. நாள்தோறும் இங்கு பயிற்சியாளர்கள் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்ட வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழ் குறித்து பயிற்சியாளரிடம் கேட்டுள்ளார். சான்றிதழ் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தனது வீட்டில் உள்ளதாகவும், அதை அங்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில் அங்கு சென்ற விளையாட்டு வீராங்கனையை பயிற்சியாளர் பாலியல் பலாத்காரம் முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, பயிற்சியாளரிடம் இருந்து தப்பித்து அப்பகுதி பொதுமக்களிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பயிற்சியாளர் விஷ்ணு காஞ்சியை காவல் துறையினர் கைது செய்து , இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சி கிளை சிறையில் அடைத்தனர்.
ஏற்கெனவே ரயில்வே சாலையில் சூப்பர் மார்க்கெட்டில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்காலிக பயிற்சியாளர் பணியில் இருந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.